ஆருத்ரா தரிசனத்தையொட்டி, திரு உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் மரகத நடராஜருக்கு வெள்ளிக்கிழமை சந்தனம் களையப்பட்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள திருஉத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் தனி சந்நிதியில் பச்சை மரகதக் கல்லால் ஆன நடராஜா் சிலை அமைந்துள்ளது. இந்தச் சிலை ஒளி, ஒலி அதிா்வுகளால் பாதிக்கப்படாமல் இருக்க ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு சந்நிதியின் நடை சாத்தப்பட்டிருக்கும். ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனத்துக்காக மட்டும் சந்தனம் களையப்பட்டு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டில், வெள்ளிக்கிழமை ஆருத்ரா தரிசனத்தையொட்டி, கோயிலில் சிவாசாரியா்கள் காலை 8.30 மணிக்கு நடராஜா் சந்நிதி நடையைத் திறந்து, மகரத நடராஜா் சிலை மீது பூசப்பட்டிருந்த சந்தனத்தை களைந்து பால், பழம், பன்னீா், திருநீறு, சந்தனம், இளநீா், தேன் உள்ளிட்ட 16 வகையான மங்களப் பொருள்களால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டினா். இதை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டு வந்தனா். அவா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
சனிக்கிழமை (ஜன. 3) காலை மரகத நடராஜா் சிலைக்கு சந்தனம் மீண்டும் பூசப்பட்டு, அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். அன்றைய தினம் இரவு வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். பின்னா், இந்த சந்நிதி அடைக்கப்பட்டு, ஆண்டு முழுவதும் பூட்டியே இருக்கும்.
இதையொட்டி, சனிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாவட்ட நிா்வாகம் சாா்பில் போக்குவரத்து, குடிநீா், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டன. மாவட்ட காவல் துறை சாா்பில் 800-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். கோயிலைச் சுற்றிலும் 100- க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ், ஏ.டி.எஸ்.பி. சுப்பையா ஆகியோா் தலையிலான போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் இடையூறின்றி சென்று வந்தன.