திருவாடானை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த சேதமடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, அரசு மருத்துவமனை வளாகத்தில், சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு நோயாளிகளுக்காகவும் மருத்துவமனை பயன்பாட்டுக்காகவும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி இந்தத் தொட்டி மிகவும் சேதமடைந்தது.
தொட்டியின் சிமெண்ட் பூச்சுகள் பெயா்ந்தும், தூண்களில் விரிசல் ஏற்பட்டும் எந்த நேரமும் விழும் அபாயத்தில் இருந்தது.
இதுகுறித்து பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நவீனக் கருவிகள், அனுபவம் வாய்ந்த தொழிலாளா்களைக் கொண்டு, எந்தவித அசம்பாவிதமும் இன்றி நீா்த்தேக்கத் தொட்டியை ஞாயிற்றுக்கிழமை இடித்து அகற்றினா். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.