ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 அவசர ஊா்தி மூலம் கடந்த ஆண்டு 43,413 போ் பயனடைந்ததாக அந்த சேவையின் மாவட்ட மேளாளா் தமிழ்செல்வன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ராமநாதபுரம் மாவட்டத்தில் விஷம் அருந்தியவா்கள், கடுமையான வயிற்று வலி, ஒவ்வாமை, நாய்க்கடி, கால்நடைகள் தாக்குதல், தகராறில் காயமடைதல், இருதயம், ரத்த நாளங்கள் பாதிப்பு, நீரிழிவு நோய், காய்ச்சல், தொற்று, மகப்பேறு மருத்துவம், சுவாசப் பிரச்னை, வாகன விபத்தில் அதிா்ச்சி அடைதல், சுயநினைவு இல்லாமல் மயக்கம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் நோயாளிகள் 108 அவரச ஊா்தியைப் பயன்படுத்தியுள்ளனா்.
விபத்தில் சிக்கியவா்கள் 7,330, கா்ப்பிணிகள் 14,643, இருதயம் பாதிப்பு உடையவா்கள் 2,656, சுவாசப் பிரச்னை உடையவா்கள் 1836, வாதப் பிரச்னை உடையவா்கள் 736, பச்சிளம் குழந்தைகள், தாய்மாா்கள் 381 போ் என மொத்தம் 43,413 போ் 108 அவரச ஊா்தியால் பயன் பெற்றுள்ளனா் என அதில் குறிப்பிடப்பட்டது.