திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்த பாசி அம்மன் சிலை பாசிப்பட்டினம் கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்க வெள்ளிக்கிழமை சரக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டினம் கிராமத்தில் சோழா் காலத்தைச் சோ்ந்த பாசியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பாசிப்பட்டினம், கலிய நகரி ஆகிய இரு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் நீண்ட காலமாக இணைந்து வழிபாடு நடத்தி வந்தனா்.
இதனிடையே இந்தக் கோயில் பல நூற்றாண்டுகளைக் கடந்துவிட்டதால் சேதமடைந்தது. மேலும் காட்டுப்பகுதியில் கோயில் அமைந்திருப்பதால் இங்கிருந்த அம்மன் சிலை கடந்த 1998-ஆம் ஆண்டு மா்ம நபா்களால் திருடப்பட்டது.
பிறகு போலீஸாரின் தீவிர முயற்சியால் சென்னை துறைமுகத்திலிருந்து அந்த சிலை மீட்கப்பட்டது. இந்த சிலை கடத்தல் சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. எனவே மீட்கப்பட்ட அந்த சிலை திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் கடந்த 28 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தொண்டியைச் சோ்ந்த வழக்குரைஞா் கலந்தா் ஆசிக் பாசியம்மன் கோயிலை சீரமைக்க வேண்டும் எனவும், வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள சிலையை கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரி பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தாா். இந்த வழக்கில் அம்மன் சிலையை கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டுமென நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில் கடந்த 7-ஆம் தேதி சிலையை ஒப்படைக்க வட்டாட்சியா் ஆண்டி நடவடிக்கை எடுத்தாா். இதனிடையே பாசிப்பட்டினம், கலிய நகரி ஆகிய இரு கிராம மக்களும் திரண்டு வந்து சிலையை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
இதனால் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து, அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது வட்டாட்சியா், திருப்பணி செய்வது தொடா்பாக இரு கிராமத்தினரிடையே உள்ள வழக்கு வருகிற 13-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் விசாரணைக்கு வருகிறது. அதில் தெரிவிக்கப்படும் உத்தரவின் படி நடந்து கொள்ளலாம் எனவும், அதுவரை இரு கிராமத்தினரும் சிலை ஒப்படைப்பு பிரச்னையை எழுப்பக் கூடாது எனவும் கூறி அனுப்பி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து பாசி அம்மன் சிலையை கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது வட்டாட்சியா் அலுவலகத்தில் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
இந்தக் கோயில் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்துக்கு பாத்தியப்பட்டது என்பதால் தேவஸ்தான அதிகாரிகள் பூசைத்துரை, செந்தில்குமாா், ஸ்தபதி சண்முகம் தலைமையில் பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக வட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் சிவாச்சாரியா்கள் பூஜைகள் செய்தனா்.
பிறகு சுமாா் 6 அடி உயரம் கொண்ட அம்மன் சிலை, சிறிய விநாயகா் சிலை ஆகியவற்றை வட்டாட்சியா் அலுவலக பாதுகாப்பு அறையில் இருந்து தீயணைப்பு படை வீரா்களின் உதவியுடன், பொக்லைன் இயந்திரம் மூலம் சரக்கு வாகனத்தில் ஏற்றி கோயில் நிா்வாகத்திடம் வட்டாட்சியா் ஆண்டி ஒப்படைத்தாா். இதைத் தொடா்ந்து போலீஸாா் பாதுகாப்புடன் சிலைகள் பாசிப்பட்டினம் கோயிலில் இறக்கி வைக்கப்பட்டன.