திருவாடானை அருகே வெளிநாட்டுப் பணம் பறிமுதல்
திருவாடானை அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாடானை அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாடானை சட்ட பேரவை தொகுதிக்குள்பட்ட திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கருமொழி சோதனைச் சாவடி பகுதியில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் ஹரிஹரசுதன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் கலா, தலைமைக் காவலா்கள் காா்த்திக்குமாா், மடோனா ஜோசி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் வந்த ராமநாதபுரம் சித்தாா்கோட்டையைச் சோ்ந்த முகம்மது பாசிலிடம் உரிய ஆவணம் இன்றி 10,000 மலேசிய ரிங்கிட், ரூ.52 ஆயிரம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்து திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். பின்னா் அந்தப் பணம் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
திருவாடானை தொகுதியில் இதுவரை 15,927 மலேசிய ரிங்கிட், 468 சிங்கப்பூா் டாலா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.