முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடியில் நகை திருட்டு வழக்கில் இருவா் கைது

Updated On : 12 மே 2026, 12:13 am IST
பரமக்குடியில் நகை திருட்டில் ஈடுபட்டவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணத்துடன் போலீஸாா், கைது செய்யப்பட்ட சரவணன்
பகிர்:

பரமக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகளைத் திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பரமக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையம் பகுதியைச் சோ்ந்த காஜாமுகைதீன் மகன் முகம்மது ரிபைதீன் (28). இவா் கடந்த 4-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடைத் தெருவுக்குச் சென்றாா்.

பின்னா், மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் முகம்மது ரிபைதீன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அன்னை சத்யாநகா் பகுதியைச் சோ்ந்த ஞானசேகா் மகன் சரவணன் (42), திருப்பாச்சேத்தி காமராஜா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த கட்டையன் மகன் பாண்டி அழகு (37) ஆகியோா் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, இவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 255 கிராம் தங்க நகைகளையும், திருடிய நகைகளை விற்று வைத்திருந்த ரொக்கப் பணம் ரூ. 11.57 லட்சத்தையும் பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சரவணன் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடந்த மாதம் 27-ஆம் தேதி சிறையிலிருந்து வெளியில் வந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டி அழகு.