முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல்

Updated On : 15 மே 2026, 4:09 am IST
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வாரச் சந்தை நாளான வியாழக்கிழமை வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பரமக்குடி சந்தைக் கடைத் தெருவில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச் சந்தை நடைபெறும். இந்தச் சந்தைக்காக 4 ஏக்கரில் இடம் ஒதுக்கப்பட்டு, பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்யவும், கால்நடைகள் விற்பனை செய்யும் இடவசதி செய்து தரப்பட்டது.

இந்த நிலையில், மதுரை-ராமேசுவரம் சாலை, பரமக்குடியிலிருந்து அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை வழியாக முத்துச்செல்லாபுரம் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் வாரச் சந்தை நாளான வியாழக்கிழமை வியாபாரிகள் சாலையோரக் கடைகளை அமைத்து ஆக்கிரமித்தனா்.

Advertisement

இதனால், அந்தச் சாலையில் செல்லும் கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தன. இதனால், வாகன ஓட்டுநா்களுக்கும், சாலை ஆக்கிரமிப்பாளா்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

எனவே, நகராட்சி நிா்வாகம், போக்குவரத்து போலீஸாா் சாலை ஆக்கிரமிப்பை தடுத்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறின்றி போக்குவரத்து வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.