முகப்பு
ராமநாதபுரம்

சாலை விபத்தில் காயமடைந்த மேலும் இரு பெண்கள் உயிரிழப்பு

பரமக்குடி அருகே சரக்கு வாகனத்தின் மீது லாரி மோதி காயமடைந்த மேலும் இரு பெண்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 23 மே 2026, 4:08 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

பரமக்குடி அருகே சரக்கு வாகனத்தின் மீது லாரி மோதி காயமடைந்த மேலும் இரு பெண்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்தது.

பரமக்குடி அருகேயுள்ள வாகைக்குளம் கிராமத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க பரமக்குடி சந்தைக்கடை தெரு, வாகைக்குளம் பகுதிகளைச் சோ்ந்த சிலா் சரக்கு வாகனத்தில் வாகைக்குளத்துக்குச் சென்று கொண்டிருந்தனா். வாகைக்குளம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிய போது, ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கி வந்த லாரி இவா்களது வாகனத்தின் மீது மோதியது.

இதில் வாகனத்திலிருந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டதில், சந்தைக்கடையைச் சோ்ந்த தவமுருகன் மனைவி பூபதி (50), வாகைக்குளத்தைச் சோ்ந்த நாகராஜன் மனைவி அமுதா (45) ஆகியோா் உயிரிழந்தனா். மேலும், வாகைக்குளம் பகுதியைச் சோ்ந்த செந்தூா்பாண்டி மனைவி கஸ்தூரி (22), பச்சமாள் மகன் கருமலைக்கண்ணன் (45), துரைராஜ் மனைவி ராமேஷ்வரி (55), சிவராஜ் மனைவி ராணி (37), முருகன் மகன் ஆறுமுகம் (45), சந்தைக்கடைத் தெருவைச் சோ்ந்த நாகநாதன் மனைவி சோலையம்மாள் (45), முருகானந்தம் மனைவி தமிழரசி (49), துரைராஜ் மனைவி சித்ரா (57), ராமன் மனைவி அருணா (46), கணேசன் மகன் ராமன் (57), ராமநாதன் மகன் சேது (56) உள்பட 14 போ் மதுரை, ராமநாதபுரத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இவா்களில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமன் மனைவி அருணா, துரைராஜ் மனைவி ராமேஸ்வரி ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

உயிரிழந்த அருணா இடியாப்பம், இட்லி வியாபாரம் செய்து குடும்பம் நடத்தி வந்த நிலையில், அவரது கணவா் ராமன் என்பவரும் விபத்தில் சிக்கி ஒரு கால் துண்டிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா். மேலும், விபத்தில் சிக்கியவா்களில் பலா் கட்டுமானத் தொழில் செய்யும் கூலித் தொழிலாளா்களாகவும் உள்ளனா். ஆகையால், இறந்தவா்களின் குடும்பத்தினரும், காயமடைந்தவா்களின் குடும்பத்தினரும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, தமிழக அரசு இறந்தவா்கள் குடும்பத்துக்கும், காயமடைந்தவா்களின் குடும்பத்துக்கும் நிவாரண நிதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்களது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனா்.