சிவகங்கையில் கூட்டுறவு வார விழா: 1157 பேருக்கு ரூ.4 கோடி கடனுதவி
சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டுறவு வாரவிழாவில் 1152 பயனாளிகளுக்கு ரூ.4.06 கோடி மதிப்பிலான கடனுதவியை அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்.
சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டுறவு வாரவிழாவில் 1152 பயனாளிகளுக்கு ரூ.4.06 கோடி மதிப்பிலான கடனுதவியை அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்.
சிவகங்கையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் சார்பில் புதன்கிழமை 64-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் ஆட்சியர் க.லதா தலைமை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 1152 பயனாளிகளுக்கு ரூ.4.06 கோடி மதிப்பிலான நேரடி கடன் மற்றும் அனுமதிக்கப்பட்ட கடன்களுக்கான காசோலைகள், சிறந்த கூட்டுறவு சங்ககளுக்கான நினைவுக் கேடயம், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் கூட்டுறவு சங்க அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியது:
கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை செய்து பாதிக்கப்பட்ட 60 ஆயிரம் விவசாயிகளுக்கு சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மூலம் ரூ.216 கோடி வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இவை தவிர, விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பெறப்பட்ட பயிர்க் கடன் ரூ.96.54 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லாத கடன் உதவித் தொகையும், பெண்களின் முன்னேற்றத்திற்காக கடனுதவியும்,பொது சேவை மையங்களில் மூலம் இருப்பிடச் சான்றிதழ்,பட்டா மாறுதல் போன்ற பல்வேறு சான்றிதழ்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்ச் சமூக வரலாற்றில் கிராமப் புற மக்களின் பொருளாதார கட்டமைப்பை வலுப்பெற செய்ததில், கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார்.
விழாவில்,கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் என்.திலீப்குமார் திட்ட விளக்க உரை ஆற்றினார். முன்னதாக மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் சிவகங்கை ஒன்றியத்தின் தலைவர் வி.ராமச்சந்திரன் வரவேற்றார். நிறைவாக,சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் துணைப் பதிவாளர் க.பாரதி நன்றி கூறினார்.
இந்நிகழ்வில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ,கோட்டாட்சியர் என்.சுந்தரமூர்த்தி,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் ஜெ.பழனிஸ்வரி,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.முருகானந்தம்,கூட்டுறவுப் பணியாளர்கள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.