இடைக்காட்டூரில் பாஸ்கு விழா ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூரில் திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் வெள்ளி, சனி இரு நாட்கள் நடைபெற்ற பாஸ்கு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூரில் திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் வெள்ளி, சனி இரு நாட்கள் நடைபெற்ற பாஸ்கு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் 135-வது ஆண்டு பாஸ்கு விழா நடைபெற்றது. முன்னதாக மாதத்தின் முதல் வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு திருப்பலி பங்கு அருட்பணியாளர் ரெமிஜியஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து நடந்த பாஸ்கு விழாவை முன்னிட்டு ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கலையரங்கில் வண்ண மின்விளக்குகளால் கண்ணைக்கவரும் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில் நடந்த இவ் விழாவில் ஏராளமான கலைஞர்கள் பங்கேற்றனர். இசைக்கலைஞர்களின் பின்னனி இசை மற்றும் பாடல்களுடன் நடைபெற்ற பாஸ்கு விழாவில் ஏசு பிரானின் வாழ்க்கை நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது. ஏசுபிரான் முதல்முதலாக தோன்றும் காட்சியின்போது கலையரங்கத்தின் மீது கண்ணைக்கவரும் வகையில் வாணவேடிக்கை நடத்தப்பட்டது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பொதுமக்கள் பாஸ்கு விழாவை கண்டு ரசித்தனர். இதற்காக மதுரை, மானாமதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்து இடைக்காட்டூருக்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.