"சிவகங்கை மாவட்ட கடைகளில் தமிழில் பெயர் பலகை வைப்பது கட்டாயம்'
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது கட்டாயம் என சிவகங்கை மாவட்டத் தொழிலாளர்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது கட்டாயம் என சிவகங்கை மாவட்டத் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சீ. மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் அரசாணையின்படி கடைகள், நிறுவனங்களில் உள்ள பெயர் பலகை தமிழில் இடம் பெற்றிருக்க வேண்டும். இதுதொடர்பாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் அண்மையில் ஆய்வு செய்த போது 41 நிறுவனங்கள் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. இதையொட்டி அந்நிறுவனங்கள் மீது வழக்குப் பதிந்து, உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் சட்டம் மற்றும் உணவு நிறுவனங்கள் சட்டத்தின் படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கடைகள், உணவு நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் பெயரை தமிழில் பெயர் பலகையில் முதன்மையாக இடம் பெறச் செய்ய வேண்டும். அதன்கீழ் ஆங்கிலத்திலும் அல்லது பிற மொழிகளிலும் இடம் பெறலாம். இதனை வணிக நிறுவனங்கள் கருத்தில் கொண்டு ஏற்கெனவே இந்தமுறை பின்பற்றப்படவில்லையெனில் பெயர் பலகைகளில் திருத்தம் செய்ய வேண்டும். பெயர் பலகைகள் அமைத்து தரும் நிறுவனங்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.