மறவமங்கலத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
மறவமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கிருஷ்ண ஜயந்தி ஊர்வலத்தை சிலர் தடுத்து நிறுத்தியதை அடுத்து, அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறவமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கிருஷ்ண ஜயந்தி ஊர்வலத்தை சிலர் தடுத்து நிறுத்தியதை அடுத்து, அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ண ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு கிருஷ்ணர் ஊர்வலம் நடைபெற்றது.
வழக்கம் போல மேலத்தெருவில் உள்ள கோயில் முன்பு தொடங்கும் ஊர்வலம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்த பின்னர் கோயிலில் நிறைவு பெறுவது வழக்கம்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊர்வலம் நடைபெற்ற போது, சிலர் பேருந்து நிலையம் பகுதிகளுக்குள் ஊர்வலம் வரக்கூடாது என தெரிவித்துள்ளனர். இதனால் ஊர்வலத்தில் பங்கேற்ற பொதுமக்கள் அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறவமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காளையார்கோவில் போலீஸார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி, ஏற்கெனவே திட்டமிட்ட பாதை வழியாக ஊர்வலத்தை நடத்துவதற்கு அனுமதியளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.