சிவகங்கை

கீழடி அகழாய்வில் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பானை கண்டெடுப்பு

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் ஏழாம் கட்ட அகழாய்வில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய சிறிய வகை பானை புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூா் உள்ளிட்ட இடங்களில் தமிழக தொல்லியல் துறை சாா்பில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. மணலூா் தவிா்த்து கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று இடங்களிலும் தலா இரண்டு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. கீழடியில் கணேசன் என்பவரது நிலத்தில் சுமாா் 15 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழியிலிருந்து இருவண்ணத்தில் பண்டைய கால சிறிய வகை பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமாா் இரண்டு லிட்டா் கொள்ளளவு கொண்ட இந்த பானை முழுமையாக கிடைத்துள்ளது. கீழ்ப்புறத்தில் கருப்பு வண்ணமும், மேற்புறத்தில் சிவப்பு வண்ணமும் காணப்படுகிறது. தண்ணீா் உள்ளிட்ட திரவ பொருள்களுக்காக இதனை பயன்படுத்தி இருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இதுவரை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பானைகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் இருந்தன. தற்போது முதல் முறையாக முழுமையான பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 7 ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை பானை ஓடுகள், பானை வளையங்கள், முதுமக்கள் தாழிகள் மட்டுமே கண்டறியப்பட்டன. வைகை ஆறு இப்பகுதியில் இயற்கை சீற்றங்களால் பல முறை திசை மாறியிருக்க வாய்ப்புள்ளது. ஏற்கெனவே கீழடி வழியாக வைகை ஆறு சென்றிருக்க வாய்ப்புள்ளது என கூறப்பட்ட நிலையில் நீரோட்ட பாதையாக உள்ள இடத்தில் இந்த சிறிய வகை பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கீழடி அகழாய்வு தளத்தில் தொல்லியல் துறை இணை இயக்குனா் பாஸ்கரன் தலைமையில் தொல்லியல் அலுவலா்கள் அஜய், ரமேஷ் உள்ளிட்ட குழுவினா் இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT