சிவகங்கை

திருப்புவனம் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் கோயில் பங்குனித் திருவிழாவில் திருத்தேரோட்டம்

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் சமேத சௌந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் வியாழக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது. 

இக்கோயிலில் பங்குனித் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய வைபவமாக கடந்த புதன்கிழமை திருக்கல்யாண வைபவமும் இரவு சுவாமியும், அம்மனும் பூப்பல்லக்கில் பவனி வருதலும் நடைபெற்றது. 

அதைத் தொடர்ந்து திருவிழாவின் 9-வது நாள் மண்டகப்படியாக திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து கோயிலுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு பெரிய தேர்களுக்கு புஷ்பவனேஸ்வரர் சுவாமியும், சௌந்தரநாயகி அம்மனும் அலங்காரத்துடன் எழுந்தருளினர். சம்பிரதாய பூஜைகள் முடிந்து மேளதாளத்துடன் வாணவேடிக்கை முழங்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோடும் வீதிகளில் இரு தேர்களும் ஆடி அசைந்து வந்தன. 

சுவாமி தேர் முதலாவதாகவும் பின்னால் அம்மன் தேரும் பகல் 12 மணிக்கு நிலை சேர்ந்தன. தேரோட்டத்தின்போது ஏராளமான சிவனடியார்கள் கைலாய வாத்தியங்களை முழங்கியவாறு சென்றனர். தேரோட்ட விழாவில் திருப்புவனம் மற்றும் சுற்று  சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 

தேரோட்டத்தை முன்னிட்டு திருப்புவனம் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. நகரில் ஏராளமான நீர்,மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் தாகம் தணிக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரு தேர்களும் மடப்புரம் விலக்கு பகுதியை கடந்த போது அந்த வழியாக பூவந்தியில் இருந்து மதுரைக்கு நோயாளியை ஏற்றிக்கொண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் வேகமாக வந்தது. 

அப்போது தேரை இழுத்துக் கொண்டிருந்த பக்தர்கள் ஆம்புலன்ஸுக்கு வழி விட்டு ஆம்புலன்ஸ் வாகனம் கூட்ட நெரிசலில் கடந்து செல்ல ஏற்பாடு செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி சுந்தரமாணிக்கம் தலைமையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT