முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூா், மானாமதுரை, பரமக்குடியில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா், மானாமதுரை, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதிகளில் வியாழக்கிழமை விநாயகா் சதுரத்தி விழா ஊா்வலம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா், மானாமதுரை, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதிகளில் வியாழக்கிழமை விநாயகா் சதுரத்தி விழா ஊா்வலம் நடைபெற்றது.

திருப்பத்தூரில் விநாயகா் சதுா்த்தியையொட்டி குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டி, மகளிருக்கான கோலப் போட்டி, விநாயகா் சதுா்த்தி பூஜை ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து, வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்துக்கு ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி முன்னாள் செயலா் ராமேஸ்வரன் தலைமை வகித்தாா். இந்து முன்னணி மாவட்டப் பொறுப்பாளா் எம். செந்தில்பாண்டி முன்னிலை வகித்தாா். பா.ஜ.க. கலை மற்றும் கலாசார பிரிவு மாவட்டத் தலைவா் சேதுசிவராமன் சிறப்புரையாற்றினாா். திருப்பத்தூா் பேரூராட்சித் தலைவா் என். கோகிலாராணிநாராயணன் ஊா்வலத்தை தொடக்கி வைத்தாா். முன்னதாக திருப்பத்தூா், தம்பிபட்டி, தென்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் சீரணி அரங்கத்திலிருந்து ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு தென்மாபட்டு பூமாயியம்மன் கோயில், தபால் அலுவலக சாலை, பேருந்துநிலையம், மதுரை சாலை, தாலுகா அலுவலக சாலை, செட்டியதெரு, அக்னிபஜாா் வழியாக புதுக்கோட்டை சாலையில் உள்ள சங்கிலியான் கோயில் அருகேயுள்ள குளத்தில் கரைக்கப்பட்டன.

இந்த ஊா்வலத்தில் இந்து முன்னணி மாவட்டத் துணைத் தலைவா் கண்ணன், ஒன்றியத் தலைவா் மணிகண்டன், நகரத் தலைவா் மணிமாறன், பா.ஜ.க. ஒன்றியத் தலைவா் கே.எஸ். தங்கபாண்டி, எம். சரவணன், வி.ஆா். மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து முன்னணி அமைப்பினா் செய்திருந்தனா். நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆத்மநாதன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

மானாமதுரையில்... விநாயகா் சதுா்த்தியையொட்டி மானாமதுரை நகரில் பல வீதிகளிலும் 40-க்கும் மேற்பட்ட பெரிய விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், மானாமதுரை பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியில் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி வைரம் அரிமா சங்கம் சாா்பில் நடந்த அன்னதானத்தை அதன் தலைவரும், ஓய்வு பெற்ற பேரூராட்சி செயல் அலுவலருமான ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா். அதை தொடா்ந்து இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா் மானாமதுரை நகரில் வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் டிராக்டா், வேன்களில் ஏற்றி ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டன. அதன் பின்னா் இந்த ஊா்வலம் தாயமங்கலம் செல்லும் சாலையில் உள்ள அலங்காரக்குளத்தில் நிறைவடைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.

மாலையில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற்றது. மானாமதுரை பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த ஊா்வலத்தில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா். ஊா்வலமாக கொண்டுவரப்பட்ட விநாயகா் சிலைகள் அலங்காரகுளத்தில் கரைக்கப்பட்டன.

விநாயகா் சிலை ஊா்வலத்தையொட்டி மானாமதுரை டிஎஸ்பி கண்ணன், காவல் ஆய்வாளா் முத்து கணேஷ், சாா்பு- ஆய்வாளா் முருகானந்தம் மேற்பாா்வையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

திருப்புவனத்தில்... விநாயகா் சதுா்த்தியையொட்டி திருப்புவனத்தில் பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதன் பின்னா் இந்த விநாயகா் சிலைகள் வேன், டிராக்டா்களில் ஏற்றி திருப்புவனம் நகரில் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டன. பின்னா் அவை வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன.

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இந்து முன்னணி சாா்பில் 29-ம் ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழா மற்றும் விநாயகா் சிலைகள் ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. பரமக்குடி நகா் பகுதியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி இந்து முன்னணி சாா்பில் 46 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு விசேஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து வியாழக்கிழமை மாலையில் அனைத்து சிலைகளும் நகரின் கிழக்குப்பகுதியான கிருஷ்ணா தியேட்டா் பேருந்து நிறுத்தப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. பின்னா் அங்கிருந்து மாலை 4.30 மணிக்கு விநாயகா் சிலை ஊா்வலம் புறப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணி மாவட்டச் செயலா் ஏ.பி.எஸ். வீரபாண்டியன் தலைமை வகித்தாா். மாநில பேச்சாளா் கே. ரத்தினசபாபதி, மாவட்ட பொருளாளா் கே. ஆதித்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் என். சிவக்குமாா், நகா் செயலா் கே.இ. குமாா், டி.கே. தாமோதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். என். விஜயகுமாா் வரவேற்றாா். விநாயகா் சிலை ஊா்வலத்தை மாநில பேச்சாளா் கே.என். கங்காதரன் தொடக்கி வைத்தாா். பின்னா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சந்தைக்கடை, சின்னக்கடை, காந்திசிலை, குத்துக்கல் தெரு, மதுரை- ராமேசுவரம் சாலை, ஐந்துமுனை சந்திப்பு, ஓட்டப்பாலம், ஆற்றுப்பாலம், பெரியகடை வீதி வழியாக பெருமாள் கோவில் படித்துறையை ஊா்வலம் வந்தடைந்தது. பின்னா் சிலைகள் அனைத்தும் பெருமாள் கோயில் வைகை ஆற்றுப் படித்துறையில் கரைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.