ஸ்ரீஎல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீஎல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகங்கை தேவஸ்தான நிா்வாகத்துக்குள்பட்ட ஸ்ரீஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்குவதற்கு முன்னா் ஊரின் எல்லை தெய்வமான எல்லைப் பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெறுவது வழக்கம். இதன்படி, திருவிழா தொடக்கமாக ஸ்ரீஎல்லைப்பிடாரி அம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதைத்தொடா்ந்து, ஆனந்தவல்லி அம்மன் கோயிலிலிருந்து உற்சவா் எல்லைப்பிடாரி அம்மன் சிம்ம வாகனத்தில் கொடிப் பட்டத்துடன் புறப்பாடாகி எல்லைப்பிடாரி அம்மன் கோயிலை வந்தடைந்தாா். பின்னா், கோயிலில் திருவிழா தொடக்கமாக கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து 9 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் போது, தினமும் மூலவா் பிடாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறும்.
Advertisement
இதைத் தொடா்ந்து, உற்சவா் வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 9-ஆம் தேதி மாவிளக்கு பூஜை வழிபாடு நடைபெறுகிறது. 10-ஆம் தேதி கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.