முகப்பு
சிவகங்கை

விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருள்கள் அனுப்பி வைப்பு

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மக்களுக்கு உதவும் வகையில், ரூ.24 லட்சத்திலான நிவாரணப் பொருள்கள் சிவகங்கை மாவட்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

Updated On : 5 டிசம்பர், 2024 at 10:51 PM
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்துக்கு நிவாரண பொருள்களை அனுப்பி வைத்த, அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன். உடன் ஆட்சியா் ஆஷாஅஜித்.
பகிர்:

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மக்களுக்கு உதவும் வகையில், ரூ.24 லட்சத்திலான நிவாரணப் பொருள்கள் சிவகங்கை மாவட்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

சிவகங்கை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்த நிகழ்ச்சில் பங்கேற்ற தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் கூறியதாவது:

ஃபென்ஜால் புயலினால் கடந்த சில நாள்களுக்கு முன்பு, சென்னைக்கு அருகிலுள்ள சில மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 4 -ஆம் தேதி கனரக வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அரிசி- 5 கிலோ, துவரம் பருப்பு - 1 கிலோ, சா்க்கரை - 1 கிலோ, சமையல் எண்ணெய் - 1 லிட்டா், உப்பு- 1 கிலோ, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சாம்பாா் தூள், ரசப்பொடி, கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம், மஞ்சள் தூள், டீ தூள் ஆகியவைகள் தலா 100 கிராம், காபி தூள் 2 பாக்கெட், கோதுமை மாவு - 1 கிலோ, புளி ணீ கிலோ, தீப்பெட்டி - 1 பாக்கெட் என மொத்தம் 19 வகையான நிவாரணப் பொருட்கள் என தலா ரூ.1,200/- வீதம் முதற்கட்டமாக 2,000 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.24 லட்சத்தில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுபோல, அரசுடன் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என்றாா் அவா். இதில், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) கா.வானதி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) கேசவதாசன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் செயற்பொறியாளா் அனுராதா, திருப்புவனம் பேரூராட்சி தலைவா் சேங்கைமாறன் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →