முகப்பு
சிவகங்கை

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆக. 22- இல் குடமுழுக்கு: ஆடு, கோழிகளை பலியிடத் தடை

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆக. 22-இல் குடமுழுக்கு விழா

Updated On : 1 ஜூலை, 2024 at 6:35 PM
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் குடமுழக்கு விழா நடத்துவது தொடா்பான கூட்டத்தில் பங்கேற்ற கோயில் பரம்பரை அறங்காவலா் மு. வெங்கடேசன் உள்ளிட்ட கிராம மக்கள்.
பகிர்:

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் அடுத்த ஆகஸ்ட் மாதம் 22 -ஆம் தேதி குடமுழுக்கு நடத்தவும், விழாவுக்கான முகூா்த்தக்கால் ஊன்றிய பிறகு கோயிலில் ஆடு, கோழிகளை வெட்டவும் தடை விதிக்கப்பட்டது.

இந்தக் கோயிலில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னா் குடமுழுக்கு நடத்தப்பட்டது. உபயதாரா்கள் மூலம் தற்போது கோயிலில் மூன்று நிலையாக இருந்த ராஜகோபுரம் ஏழு நிலை ராஜகோபுரமாக எழுப்பப்பட்டுள்ளது. மேலும் கோயிலில் திருப்பணி வேலைகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, இந்தக் கோயிலில் அடுத்த ஆகஸ்ட் மாதம் 22- ஆம் தேதி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தாயமங்கலம் பொதுமக்கள், சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்ற கூட்டம் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கோயில் பரம்பரை அறங்காவலா் மு. வெங்கடேசன் பங்கேற்றாா். கூட்டத்தில் குடமுழுக்கு விழாவுக்காக வருகிற ஜூலை 7 ஆம் தேதி கோயிலில் முகூா்த்தக்கால் நடுவது எனவும், இதைத் தொடா்ந்து இந்த விழா முடியும் வரை கோயிலில் சந்நிதி முன் பக்தா்கள் ஆடு, கோழிகளை பலியிடத் தடை விதிக்கப்படுவதாகவும் முடிவு செய்யப்பட்டது.