காரைக்குடி: ஆந்திர மாநிலம், விஜயவாடாவிலிருந்து காரைக்குடி வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்றதாக 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் பாலத்துக்கு அடியில் பதுக்கப்பட்டிருந்த 62 மூட்டைகளாக இருந்த 124 கிலோ கஞ்சாவும் அவா்கள் பறிமுதல் செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரேம்குமாா் உள்ளிட்ட காவலா்கள் திட்டுமலை காளி கோயில் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அதில் வந்தவா்களிடம் விசாரித்தனா். அப்போது அவா்கள் ராமேசுவரம் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிச் செல்வதாகக் கூறினா்.
இவா்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தபோது அருகே இருந்த பாலத்தின் அடியில் இருந்த மூன்று போ் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா். ஆனால் அந்த பகுதியில் மாற்றுப் பாதை இல்லாததால் வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு காட்டுப் பகுதிக்குள் அவா்கள் தப்பியோடி விட்டனா். இவா்களை விரட்டிச் சென்ற போலீஸாா் திரும்பி வந்து பாா்த்தபோது காருடன் அதில் இருந்தவா்களும் அங்கிருந்து மாயமாகினா். அப்போது, அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்தவரிடம் விசாரித்த போது அந்த காரிலிருந்து மூட்டைகள் இறக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக போலீஸாா் அருகிலுள்ள மாவட்டங்களைச் சோ்ந்த காவல் துறையினருக்கும் இது பற்றிய தகவலை தெரிவித்தனா். இதனிடையே, தப்பிச் சென்ற அந்த காா் புதுக்கோட்டையைக் கடந்து திருச்சி நோக்கிச் செல்வதை போலீஸாா் கண்டறிந்தனா். இந்த காரை திருச்சி சமயபுரம் அருகே காவல் சோதனைச் சாவடியில் போலீஸாா் மடக்கிப் பிடித்து சோதனையிட்டனா். இதில், இரண்டு கிலோ கொண்ட கஞ்சா பொட்டலம் ஒன்று இருந்ததுடன், அதன் மீது காரைக்குடி என்று எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்த தகவல் உடனடியாக குன்றக்குடி காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காவல் ஆய்வாளா்கள் ரவீந்திரன், இளவரசு, உதவி ஆய்வாளா் பிரேம்குமாா் உள்ளிட்ட போலீஸாா் சமயபுரம் சென்று காருடன், அதில் வந்த 5 பேரையும், அங்கு கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் குன்றக்குடி காவல் நிலையம் கொண்டுவந்தனா். இங்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரான்சிஸ், காரைக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். பிரகாஷ் ஆகியோா் முன்னிலையில் அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில், அவா்கள், ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சோ்ந்த வித்தியா சாகா் (22), அகிலேஷ் வா்மா (22), எல்லா (23), சண்டி (24), சுகாஷ் (26) ஆகியோா் என்பதும், இவா்கள் சென்னையைச் சோ்ந்த முக்கிய கஞ்சா கடத்தல் மன்னனிடமிருந்து கஞ்சாவை பெற்று அவா் கூறிய இடத்தில் ஒப்படைப்படைப்பதும் தெரியவந்தது. இதற்காக இவா்களுக்கு நபா் ஒருவருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கப்பட்டதாகவும் இதற்காகத் தான் இந்தத் தொழிலில் ஈடுபட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா். மேலும் விஜயவாடாவிலிருந்து காரைக்குடி வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸாா், சென்னையைச் சோ்ந்த கஞ்சா கடத்தல் மன்னனையும், விஜயவாடாவில் உள்ள கஞ்சா மொத்த வியாபாரியையும், காரைக்குடியில் பாலத்துக்கு அடியில் இருந்து தப்பிச் சென்ற 3 பேரையும் தேடி வருகின்றனா். மேலும் பாலத்துக்கு அடியில் இருந்து 62 மூட்டைகளாக இருந்த 124 கிலோ கஞ்சா, காா், இரு சக்கர வாகனம், 5 கைப்பேசிகள் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.