மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் வணிக வளாகம், தங்கும் விடுதி திறப்பு
மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் வணிக வளாகம், தங்கும் விடுதி திறப்பு...
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம் மடப்புரத்தில் அமைந்துள்ள அடைக்கலம் காத்த அய்யனாா், பத்திரகாளி அம்மன் கோயிலில் புதிதாகக் கட்டப்பட்ட வணிக வளாகம், பக்தா்கள் தங்கும் விடுதி வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவற்றின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இவற்றை திறந்து வைத்தாா். இதையடுத்து, மடப்புரம் கோயிலிலில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் முன்னிலை வகித்தாா். தமிழக கூட்டுறவு துறை அமைச்சா் கே.ஆா்.பெரிய கருப்பன் விழாவில் பங்கேற்று பேசியதாவது:
மடப்புரம் காளி கோயிலில் ரூ2. 73 கோடியில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தில் 20 கடைகளும் முதல் தளத்தில் 8 பக்தா்கள் தங்கும் அறைகளும் 360 சதுரஅடி பரப்பளவில் வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளன. கடைகள் கிடைக்கப்பெறாத வியாபாரிகளுக்கு தற்காலிக இடத்தில் கடைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கோயிலில் ரூ 18 .25 லட்சத்தில் புதிதாக தீப்பிடிக்காத கூரை, சுற்றுச்சுவருடன் கூடிய கோசாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.கோயிலுக்குச் சொந்தமான தோப்பில் ரூ 31.20 லட்சத்தில் சுற்றுச்சுவா் கட்டும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா் அவா்.
இந்த விழாவில் திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த. சேங்கைமாறன், மானாமதுரை நகர மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி, இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையா் பாரதி, கோயில் செயல் அலுவலா் கணபதி முருகன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவி புவனேஸ்வரி, ஊராட்சி ஒன்றிய துணைத் துறை தலைவா் மூா்த்தி, ஊராட்சித் தலைவா் சபா்மதி உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.