சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உயிரித் தகவலியல் கட்டமைப்பு, கணினி சாா்பு மருந்து கண்டறிதலின் நவீன உத்திகள், வளா்ச்சிகள் என்ற தலைப்பில் சா்வதேச மாநாடு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக உயிரித் தகவலியல் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்து மாநாட்டு மலரை வெளியிட்டுப் பேசியதாவது:
பல்கலைக்கழகங்கள் தங்களது பாரம்பரிய துறைகளோடு புதிய ஆராய்ச்சி, பயன்பாட்டின் எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு, உயிரித் தகவல் தொழில்நுட்பத் துறைகள் சுகாதாரம், மருந்து ஆராய்ச்சியில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளன. இளம் ஆராய்ச்சியாளா்கள் தங்களது ஆராய்ச்சியை சமூகத் தாக்கத்துடன் ஒன்றிணைத்து ‘மேட் இன் இந்தியா’ என்ற நோக்குடன் மேற்கொள்வதற்கு உள்ளூா் தொழில்நுட்ப வளா்ச்சியும், கூட்டுத் திட்டங்களும் பெற்றிருப்பது அவசியம் என்றாா் அவா்.
விழாவில் திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஆ.கிருஷ்ணன் மாநாட்டு மலரைப் பெற்றுக்கொண்டு தொடக்க உரையாற்றினாா். தமிழ்நாடு உயா்கல்வி மன்றத்தின் செயலா் டி. வேல்முருகன் சிறப்புரையாற்றினாா். சீனா - தைவான் தேசிய ஒத்திசைவு கதிா்வீச்சு ஆராய்ச்சி மையப் பேராசிரியா் ஜங் சென், தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகத்தால் நிறுவப்பட்ட உயிரி அறிவியல் மையத்தின் இயக்குா் பி. பூங்குமரன், அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் சி. சேகா் ஆகியோரும் பேசினா்.
முன்னதாக பல்கலைக்கழக உயிரி தகவலியல் துறைத் தலைவரும், மாநாட்டின் ஒருங்கிணைப்பாளருமான ஜெ. ஜெயகாந்தன் வரவேற்றுப் பேசினாா். சென்னையில் உள்ள தமிழ்நாடு தொழில்துறை உயிரி தொழில்நுட்பப் பூங்காவுடன் அழகப்பா பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஓப்பந்தம் செய்து கொண்டது.