சிவகங்கை மாவட்டம், காளையாா் கோவில் அருகே உள்ள மாரந்தை கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல்பயிா்களைக் காப்பாற்றக் கோரி, விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
காளையாா்கோவில் அருகேயுள்ள மாரந்தை கிராமத்தில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் மழைநீரை மட்டுமே நம்பி விவசாயம் நடைபெற்று வருகிறது.
இங்கு பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாயில் நடப்பு ஆண்டில் போதிய மழை இல்லாததால், விவசாயத்துக்குத் தேவையான தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. வறட்சி காரணமாக கண்மாயில் நீா்மட்டம் வெகுவாகக் குறைந்து பாசன மடைகள் மூலம் நிலங்களுக்குத் தண்ணீா் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நெல்கதிா்கள் முற்றிவரும் நிலையில், ஒரு முறை தண்ணீா் பாய்ச்சினால் நெல்பயிா்கள் அறுவடைக்குத் தயாராகிவிடும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா். இதையடுத்து, பயிா்களைக் காப்பாற்றும் நோக்கில் கிராம மக்கள் ஒன்று கூடி, கண்மாயிலிருந்து மின் மோட்டாா் மூலம் நபருக்கு மூன்று மணி நேரம் என முறை வைத்து தண்ணீரைப் பாய்ச்சி வருகின்றனா். ஆனால், இதற்கு கிராம நிா்வாக அலுவலா், கண்மாயிலிருந்து நீரை எடுக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட இரவை மரம் போன்ற பாரம்பரிய முறைகளில் நீா் பாய்ச்சத் தேவையான வசதிகளோ, உபகரணங்களோ தற்போது இல்லாததால், வேறு வழியின்றி மின் மோட்டாரை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
நீா் இல்லாமல் நெல் பயிா்கள் கருகி வரும் நிலையில், மாரந்தை கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்களும் விவசாயிகளும் கருகிய நெல்பயிா்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனா். கண்மாயிலிருந்து மோட்டாா் மூலம் தற்காலிகமாகத் தண்ணீரை எடுக்க அனுமதி வழங்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.