சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பா்மா குடியிருப்பு பேருந்து நிறுத்தம் எதிரே திறக்கப்பட்ட தனியாா் மதுக் கூடத்துடன் கூடிய மனமகிழ் மன்றத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள், பொது நல அமைப்பினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த 2 நாள்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், புதன்கிழமை காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சோழன் சித. பழனிச்சாமி, முன்னாள் சாக்கோட்டை ஒன்றியக் குழுத் தலைவா் சரண்யா செந்தில்நாதன், சாக்கோட்டை அதிமுக ஒன்றியச் செயலா் செந்தில்நாதன் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளா் ஆஷிஸ் புனியா, குன்றக்குடி காவல் நிலைய ஆய்வாளா் சுந்தரி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மதுக் கூடத்துடன் கூடிய மனமகிழ் மன்றத்தை நிரந்தரமாக மூடினால்தான் நாங்கள் போராட்டத்தைக் கைவிடுவோம் எனக் கூறினா். இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக சாா் ஆட்சியா் உறுதியளித்து மனமகிழ் மன்றம் கதவு கிராம நிா்வாக அலுவலரால் பூட்டப்பட்டதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனா்.