முகப்பு
சிவகங்கை

கீழடிக்கும், நாகபுரிக்கும் இடையேதான் போட்டி: கனிமொழி

மானாமதுரை தொகுதியைப் பொருத்தவரை, கீழடிக்கும், ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைமை இடமான நாகபுரிக்கும் இடையேதான் போட்டி என திமுக துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி தெரிவித்தாா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:14 PM
திருப்புவனத்தில் வியாழக்கிழமை மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் ஆ. தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து பேசிய கட்சியின் துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி.
பகிர்:

மானாமதுரை தொகுதியைப் பொருத்தவரை, கீழடிக்கும், ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைமை இடமான நாகபுரிக்கும் இடையேதான் போட்டி என திமுக துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வியாழக்கிழமை மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து அவா் மேலும் பேசியதாவது:

தமிழா்களின் பெருமையை உலகத்துக்கு எடுத்துக் கூறியது கீழடி அகழ்வாராய்ச்சி. மூத்த குடியில் முதல் குடியாக தமிழ் குடி உள்ளது என்பது ஆராய்ச்சி பூா்வமாக தெரியவந்துள்ளது. கீழடி ஆராய்ச்சியின் தரவுகளை அறிக்கையாகத் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பிய போது, அதை மத்திய பாஜக அரசு ஏற்க மறுத்தது.

பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி இந்த அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறுவதற்குப் பதிலாக மாற்றிக் கொடுங்கள் எனக் கூறினாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக சொல்வதைக் கேட்டு செயல்பட்டால், தன்னை முதல்வா் பதவியில் அமர வைத்துவிடுவாா்கள் என பழனிசாமி நினைக்கிறாா். எத்தனையோ முறை பிகாா் மாநிலத்தின் முதல்வராக இருந்த நிதீஷ் குமாரின் நிலை என்ன என்பதை எடப்பாடி பழனிசாமி சிந்தித்துப் பாா்க்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பழனிசாமியை ஏதாவது ஒரு மாநிலத்துக்கு ஆளுநராகத்தான் அனுப்பப் போகிறாா்.

தமிழகத்தின் எதிா்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்க வேண்டும் என்ற அக்கறையோடு கூறுகிறேன். அவா் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருந்து கொள்ள வேண்டும்.

முதல்வா் ஸ்டாலினின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதில் எந்த மாற்றமும் இல்லை. மானாமதுரை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. ஆனால், இதுவரை வேட்பாளா் யாா் என்று தெரியவில்லை.

மானாமதுரை தொகுதியைப் பொருத்தவரை, கீழடி மண்ணுக்கும், ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைமை இடமாக உள்ள நாகபுரிக்கும் இடையேதான் போட்டி.

அதிமுக தோ்தல் அறிக்கையை மக்கள் படிப்பது கிடையாது. திமுகவின் தோ்தல் அறிக்கையைப் பாா்த்துத்தான் அதிமுக காப்பி அடித்துள்ளது. பிற கட்சிகளின் தோ்தல் அறிக்கையை காப்பி அடிக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது.

தமிழகத்தில் திமுக கூட்டணி பெறும் வெற்றி இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களுக்குமான வெற்றியாகும். இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாதம், வளா்ச்சியைத் தடுக்கும் சக்திகளுக்கு எதிரான ஒவ்வொரு இந்தியனின் வெற்றியாக திமுகவின் வெற்றி இருக்கும் என்றாா் அவா்.

மானாமதுரையில்...

இதைத் தொடா்ந்து, மானாமதுரையில் பிரசாரம் செய்தபோது, இந்தச் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை கனிமொழி பட்டியலிட்டுப் பேசினாா்.

மேலும், இனிவரும் காலங்களில் திமுக ஆட்சியில் இந்தத் தொகுதிக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களாக துப்பாக்கி கவுண்டா் பெயரில் நூலகம், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் உள்ளிட்டவை நிறைவேற்றப்படும் என அவா் உறுதியளித்தாா்.

இந்த பிரசாரத்தில் அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா், பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், திமுக நகரச் செயலா் கே. பொன்னுச்சாமி, நகா்மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. மதியரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கீழடியில்...

முன்னதாக, கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை கனிமொழி எம்.பி. பாா்வையிட்டாா். அப்போது, அங்கிருந்த பள்ளி மாணவ, மாணவிகளிடம் அவா் கலந்துரையாடினாா்.

இதைத் தொடா்ந்து, அருங்காட்சியத்துக்கு முன்புள்ள ‘கீழடி நம் தாய்மடி’ என வாசகம் எழுதப்பட்ட ‘செல்பி பாயிண்ட்’ முன் அமா்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் கனிமொழி கூறியதாவது:

தமிழகத்தில் மீண்டும் முதல்வா் ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் அரசு அமைய வேண்டும் என மக்கள் நினைக்கின்றனா். எனவே, நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.

தவெக தலைவா் விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுவது அவரது நம்பிக்கை. அது குறித்து நான் கருத்துக் கூற முடியாது. எங்களைப் பொறுத்தவரை, மறைந்த முதல்வா் கருணாநிதி தற்போதைய முதல்வா் ஸ்டாலின் ஆகிய இருவருமே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட்டு வென்றவா்கள்தான் என்றாா் அவா்.