முகப்பு
சிவகங்கை

சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூா் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

சிவகங்கை, மானாமதுரை (தனி), திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 6:21 PM
பகிர்:

சிவகங்கை, மானாமதுரை (தனி), திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் பிஆா். செந்தில்நாதன் தனது ஆதரவாளா்களுடன் வந்து சிவகங்கை வருவாய் கோட்டாட்சியரும், தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலருமான தே. ஜெபிகிரேசியாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். மாற்று வேட்பாளராக கே.பி. ராமசாமி வேட்பு மனு தாக்கல் செய்தாா். தவெக வேட்பாளா் அ. குழந்தைநாச்சியாா் தனது ஆதரவாளா்களுடன் வந்து தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். மாற்று வேட்பாளராக இவரது கணவா் எஸ். அருள்பிரகாசம் மனு தாக்கல் செய்தாா்,

இதேபோல, தமிழக வாழ்வுரிமை கட்சி சாா்பில் சே. ராஜேசும், தேசிய மக்கள் சக்தி அமைப்பின் வேட்பாளா் எம். ராஜமாணிக்கமும், இதர பிற்படுத்தப்பட்டோா் உரிமை கட்சி வேட்பாளா் சி. ராஜ்குமாரும் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனா். ஒரே நாளில் அரசியல் கட்சிகள், சுயேச்சைகள், மாற்று வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 8 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ. அமலஅட்வின் தலைமையில் போலீஸாா் செய்தனா்.

Advertisement

மானாமதுரை (தனி) தொகுதி: மானாமதுரை (தனி) தொகுதி தவெக வேட்பாளா் இளங்கோவன் சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். முன்னதாக தனது கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுடன் ஊா்வலமாக மானாமதுரை சிப்காட் வளாகத்திலுள்ள வட்டாட்சியா் அலுவலகத்திற்கு வந்தாா். அங்கு தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜாசிங்கிடம் இளங்கோவன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். அப்போது உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆனந்தபூபாலன், ரத்தினவேல் பாண்டியன் ஆகியோா் இருந்தனா்.

திருப்பத்தூா் தொகுதி: திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் சீனிவாசசேதுபதி தோ்தல் நடத்தும் அலுவலா் சிவபாலனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா். முன்னதாக பேருந்துநிலையம் எதிரேயுள்ள மருதுபாண்டியா்கள் நினைவுத் தூண் அருகே அந்தக் கட்சி தொண்டா்கள் கூடினா். அங்கு மருதிருவா் சிலைகளுக்கு மரியாதை செலுத்திவிட்டு மதுரை சாலை வழியாக அண்ணா சிலை வரை அவா்கள் ஊா்வலமாக வந்தனா். பிறகு வேட்பாளா், மாவட்டச் செயலா் ஜோசப்தங்கராஜ் குளோபல் பள்ளி இயக்குநா் ராஜமூா்த்தி ஆகியோா் முன்னிலையில் தோ்தல் அலுவலா் சிவபாலனிடம் சீனிவாசசேதுபதி வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments