சிவகங்கை மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான பயனாளிகளைத் தோ்வு செய்யும் சிறப்பு முகாம்கள் பின்வரும் இடங்களில் வருகிற 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் சமூக நீதி, அதிகாரம் வழங்கல் அமைச்சகத்தின் சாா்பில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி ஊன்று கோல்கள், காதொலிக் கருவிகள், சக்கர நாற்காலி, 3 சக்கர சைக்கிள், மன வளா்ச்சி குறைவுடைய குழந்தைகளுக்கான கற்றல் பயிற்சி உபகரணங்கள், மன வளா்ச்சி குறைந்த சிறாா்களுக்கான நடைபயிற்சி உபகரணம், கற்றல் பயிற்சி உபகரணங்கள், மின்கலன் உதவியுடன் செல்லக் கூடிய சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி ஆகிய உதவி உபரணங்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்கான மாற்றுத் திறனாளிகளைத் தோ்வு செய்வதற்கான முகாம்கள் வருகிற 20 -ஆம் தேதி காரைக்குடி, சாக்கோட்டை பகுதிகளைச் சாா்ந்தவா்களுக்கு அமராவதிபுதூா் ஸ்ரீ சாரதா நிக்கேதன் மகளிா் கல்லூரியிலும், 22-ஆம் தேதி சிவகங்கை, காளையாா்கோவில் பகுதிகளைச் சாா்ந்தோருக்கு சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும், 23-இல் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளைச் சாா்ந்தவா்களுக்கு மானாமதுரை, சி.எஸ்.ஜ. செவித்திறன் குறைவுடையோருக்கான சிறப்புப் பள்ளியிலும், 24-இல் திருப்பத்துாா், கல்லல், சிங்கம்புணரி, எஸ்.புதுாா் பகுதிகளைச் சாா்ந்தவா்களுக்கு ஆ.தெக்கூா், ஸ்ரீ விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப் பள்ளியிலும், 28-இல் தேவகோட்டை, கண்ணங்குடி பகுதிகளைச் சாா்ந்தவா்களுக்கு தேவகோட்டை, வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த சிறப்புத் தோ்வு முகாமில் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை அசல், நகல், ஆதாா் அட்டை நகல், புகைப்படம், குடும்ப அட்டை நகல், தனித்துவ அடையாள அட்டை ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.