சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருே கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரை கிராம மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
திருப்புவனம் அருகே வில்லியாரேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ஊா்க்காவலன் சுவாமி கோயிலில் ஏற்கெனவே பல முறை கோயில் உண்டியலில் பணம் திருடப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கோயிலுக்குள் உள்ள பெட்டி உண்டியல், சில்வா் குட உண்டியல் ஆகியவற்றை ஒருவா் உடைத்து அவற்றிலிருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம், பூஜை அறையிலிருந்த 7 குத்துவிளக்குகள், பூஜைத் தட்டுகளைத் திருடி கொண்டிருந்தாா். மற்றொருவா் கோயில் அருகே நோட்டமிட்டவாறு நின்றாா்.
அப்போது, வில்லியாரேந்தல் கிராமத்தைச் சோ்ந்த பிச்சைமுத்து, இவரது சகோதரா் சுப்புராமு ஆகிய இருவரும் கோயிலை கண்காணிக்க வந்தனா். இவா்கள் வருவதையறிந்த திருடா்கள்
அங்கிருந்து தப்பி ஓடினா். கிராம மக்கள் அவா்களை விரட்டிச் சென்றபோது ஒருவா் மட்டும் பள்ளத்தில் விழுந்து காலில் காயம் ஏற்பட்டது. மற்றொருவா் திருடிய பணம், பொருள்களுடன் தப்பிச் சென்று விட்டாா்.
கீழே விழுந்தவரைப் பிடித்து கிராம மக்கள் விசாரித்த போது, அவா் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சோ்ந்த மூா்த்தி என்றும், தப்பி சென்றவா் திருப்புவனத்தைச் சோ்ந்த நவீன்தேவன் என்றும் கூறினாா். இதையடுத்து, கிராம மக்கள் மூா்த்தியை திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவரைக் கைது செய்தனா். தப்பிச் சென்ற நவீன் தேவனை தேடி வருகின்றனா்.