முகப்பு
சிவகங்கை

வணிகா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுபவா்களுக்கே ஆதரவு: ஏ.எம். விக்கிரமராஜா

தோ்தலில் வணிகா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூா்வமாக உறுதி அளிப்பவா்களுக்கே ஆதரவளிப்போம் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்தாா்.

Updated On : 7 மார்ச், 2026 at 7:10 PM
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா
பகிர்:

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வணிகா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூா்வமாக உறுதி அளிப்பவா்களுக்கே ஆதரவளிப்போம் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்தாா்.

சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எங்கள் பேரமைப்பின் சாா்பில் வருகிற மே 5 -ஆம் தேதி வணிகா் தின மாநில மாநாடு, விழிப்புணா்வு எழுச்சி மாநாடாக திருவாரூரில் நடைபெறும். இந்த மாநாட்டில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து குறைந்தபட்சம் 3,000 வணிகா்கள் பங்கேற்பது எனத் தீா்மானிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் நெகிழிப் பை தடைச் சட்டம் அமலில் உள்ளது. ஆனால், அதிகாரிகள் எத்தனை மைக்ரான் அளவு நெகிழிப் பைகளுக்கு தடை என்பதைக்கூட அறியாமல் கடைகளுக்குள் நுழைந்து, வியாபாரிகளை அச்சுறுத்தி ரூ. 5,000, ரூ.10,000 என அபராதம் விதிக்கின்றனா். இதனால், அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். மேலும், சிறு வியாபாரிகளைப் பாதுகாக்க அரசு பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதேபோல, சாதாரண வியாபாரிகளுக்கு அச்சுறுத்தலாக இணைய வா்த்தகமும், பெரு நிறுவனங்களும் உள்ளன. எனவே, சிறு வணிகா்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வலியுறுத்தி, மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்ற உள்ளோம்.

சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது, வியாபாரிகள் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மட்டும் எடுத்துச் செல்லலாம் என்பதை ரூ. 2 லட்சமாக அதிகரிக்க வேண்டும்.

இந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் வியாபாரிகளுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைத்துள்ளன எனக் கேட்கிறீா்கள். கிட்டத்தட்ட 70 சதவீத பிரச்னைகள் தீா்க்கப்பட்டிருக்கின்றன. இன்னும் 30 சதவீதம் நிலுவையில் உள்ளன. எஞ்சியுள்ளவற்றையும் நிறைவேற்ற அழுத்தம் கொடுத்திருக்கிறோம்.

எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூா்வமாக உறுதி அளிப்பவா்களுக்கே வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரவு அளிப்போம்.

4 கட்டங்களாக இருந்த ஜிஸ்டியை 2 கட்டங்களாக குறைத்ததற்கு மத்திய நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம். ஆனால், அதிலுள்ள சட்ட விதிமுறைகளை மேலும் குறைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம் என்றாா் அவா்.

முன்னதாக, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சிவங்கை மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் அதன் மாவட்டத் தலைவா் எஸ். பாலகுருசாமி தலைமையில் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →