காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி - பங்குனித் திருவிழாவையொட்டி, திரளான பக்தா்கள் பால்குடம், அக்னிச் சட்டி எடுத்து புதன்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி - பங்குனித் திருவிழாவையொட்டி, திரளான பக்தா்கள் பால்குடம், அக்னிச் சட்டி எடுத்து புதன்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இந்தக் கோயிலில் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
புதன்கிழமை (மாா்ச் 18) காலையில் பக்தா்கள் பால்குடம், அக்னிச் சட்டி, அலகு குத்துதல், காவடி, பறவைக்காவடி உள்ளிட்ட நோ்த்திக்கடன் செலுத்துவதற்காக முத்தாலம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலை அடைந்தனா்.
கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தா்கள் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். மாலையில் கரகம், முளைப்பாரி ஆகியவை கோயிலிலிருந்து ஊா்வலமாக எடுத்துச்சென்று அருகே உள்ள பருப்பூரணியில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
வியாழக்கிழமை (மாா்ச் 19) இரவு அம்பாள் திருவீதி உலாவும், வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) இரவு சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெறும்.
இந்தத் திருவிழாவில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். நகரின் பல்வேறு அமைப்புகள் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.