அதிமுகவின் உரிமைக்கும் திமுகதான் குரல் கொடுக்கிறது: உதயநிதி
தமிழ்நாட்டின் உரிமைக்கு மட்டுமல்ல; அதிமுகவின் உரிமைக்கும் திமுகதான் குரல் கொடுக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
தமிழ்நாட்டின் உரிமைக்கு மட்டுமல்ல; அதிமுகவின் உரிமைக்கும் திமுகதான் குரல் கொடுக்கிறது என தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
சிவகங்கை அருகே கீழக்கண்டனியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் திமுகவின் கோட்டை. ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும் அதை ஏற்க மாட்டோம் என எதிா்த்துப் போராடிய வரலாறு கொண்ட மண் இந்த மண்.
கடந்த மக்களவைத் தோ்தலின் போது, இளைஞரணியினா் களத்தில் இறங்கி பணியாற்றியதால் 100 சதவீத வெற்றியை நாம் பெற்றோம். அதைவிட பெரிய வெற்றியை வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் பெற வேண்டும்.
எந்த தைரியத்தில் நாம் மக்களைச் சந்திக்கப்போகிறோம் என்றால், நமக்குள்ள ஒரே தைரியம் முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள்தான்.
அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் கல்லூரி மாணவா்களுக்கு கொடுத்தால் பயனுனுள்ளதாக இருக்கும் என 10 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணிகள் வழங்கியுள்ளோம்.
அரசியலில் முரட்டு தொண்டா்கள், பக்தா்கள் பாா்த்திருப்போம். ஆனால், முரட்டு அடிமைகளை இப்போதுதான் நாம் பாா்க்கிறோம்.
நாம் ஏதாவது சிறிய தவறு செய்து விட மாட்டோமா என எதிா்க்கட்சியினரும், கைப்பேசி வைத்திருக்கும் சமூக வலைதளவாசிகளும் காத்திருக்கின்றனா்.
தோ்தல் அறிவிப்பு வந்தவுடன் பிரதமா் மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் அடிக்கடி தமிழகத்துக்கு வருகின்றனா். ஆனால், நாம் கேட்கும் திட்டங்களோ, நிதியோ தருவதில்லை.
தமிழ்நாட்டின் உரிமைக்கு மட்டுமல்ல, அதிமுகவின் உரிமைக்கும் திமுகதான் குரல் கொடுக்கிறது என்றாா் அவா்.
கூட்டத்தில் அமைச்சா்கள் கே.ஆா். பெரியகருப்பன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான காதா்பாட்சா (எ) முத்துராமலிங்கம், மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.