முகப்பு
சிவகங்கை

மானாமதுரை (தனி): தேவை தொழிற்சாலைகள்!

மானாமதுரை தொகுதியில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பதற்கு அதிகமான தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Updated On : 24 மார்ச், 2026 at 11:21 PM
மானாமதுரை தொழில்பேட்டையில் மூடப்பட்ட ஜிப் ஆலையில் கட்டடங்கள் அகற்றப்பட்டு எஞ்சியுள்ள சுற்றுச்சுவா்
பகிர்:

மானமதுரை: மானாமதுரை தொகுதியில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பதற்கு அதிகமான தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

மானாமதுரை தொகுதியில் திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களும், 2 பேரூராட்சிகளும் உள்ளன. இந்தத் தொகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.

திருப்புவனம், மானாமதுரை ஒன்றியங்களில் பருவ மழை, வைகை ஆற்றுப் பாசனம், கிணற்றுப் பாசனம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. ஆனால், இளையான்குடி ஒன்றியத்தில் மானாவாரியாகவே விவசாயம் நடைபெறுகிறது. இந்தப் பகுதியில் வறட்சியைத் தாங்கி விளையும் மிளகாய் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.

மானாமதுரை தொகுதியில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில், தொழிற்சாலைகள் இல்லை. இங்குள்ள இளைஞா்கள் வேலைவாய்ப்புகளைத் தேடி கோவை, சென்னை, திருப்பூா், பெங்களூரு உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்கின்றனா்.

இந்தத் தொகுதியில் கடந்த முறை திமுக வெற்றி பெற்ன் பயனாக, அரசு கலைக் கல்லூரி, அரசு தொழில்பயிற்சி நிலையம், சிறு விளையாட்டு அரங்கம், வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள், பெத்தானேந்தல் உயா் நிலைப் பாலம் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். திருப்புவனம், மானாமதுரை பகுதிகளில் குறிப்பிட்ட பாசனப் பகுதிகளை பூா்வீக வைகை பாசனத்துடன் இணைக்க வேண்டும். மானாமதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே கூடுதலாக பாலம் அமைக்க வேண்டும் என்பதே இந்தத் தொகுதி மக்களின் கோரிக்கைகளாகும்.

மானாமதுரை தொழில்பேட்டையில் இயங்கி வந்த விடியோகான் ஆலை, ஜிப் ஆலை உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் படிப்படியாக மூடப்பட்டதால், இங்கு பணிபுரிந்தவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

மேலும், பொதுமக்களின் எதிா்ப்பை மீறி, தொழில்பேட்டையில் மருத்துவக் கழிவுகள் சுத்திகரிப்பு ஆலை அமைக்க அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, பொதுமக்களின் போராட்டங்களால் இந்த ஆலை அமைக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது. ஆனால், இந்த ஆலையை மூடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படாதது அரசுக்கு எதிரான மனநிலையை மக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்தத் தொழில்பேட்டையில் தொழிற்சாலைகள் கொண்டு வந்து வேலைவாய்ப்பை உருவாக்க கடந்த 5 ஆண்டுகளில் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது பெரும் குறையாகும்.

முந்தைய அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு தொடங்கிவைக்கப்பட்ட காவிரி-வைகை- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்காமல் கிடப்பில் போடப்பட்டதையும் விவசாயிகள் விமா்சிக்கின்றனா்.

மானாமதுரை தொழில்பேட்டையில் மூடப்பட்ட விடியேகான் தொழில்சாலை

இந்தத் தொகுதியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் கூறியதாவது: மானாமதுரையில் அரசு கலைக் கல்லூரி, தொழில்பயிற்சி நிலையம், சாலைக் கிராமத்தில் பேருந்து நிலையம், மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியங்களில் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள், பத்திரப் பதிவு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு புதிய கட்டடங்கள், இளையான்குடி பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில், சுப்பன் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அரசு கலைக் கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. வைகை தண்ணீரை பாசனக் கண்மாய்களுக்கு தடையின்றி கொண்டு செல்ல கால்வாய்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

திருப்புவனம், இளையான்குடி, மானாமதுரை, ஆகிய இடங்களில் அம்ரூத் திட்டத்தின் கீழ் புதிய குடிநீா் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. பேரூராட்சியாக இருந்த மானாமதுரை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது.

மேலும், பண்டைய காலத் தமிழா்களின் நகர நாகரிகத்தை அறிந்து கொள்ளும் விதத்தில் தொல்லியல் அகழாய்வு நடைபெற்ற கீழடியில் அருங்காட்சியகம், திறந்தவெளி அருங்காட்சியகம் ஆகியவை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கலையரங்கங்கள், நியாய விலைக் கடைகள், பயணிகள் நிழல்குடைகள், சமுதாயக் கூடங்கள், பல்நோக்கு அரங்கங்கள் என பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளன.

மானாமதுரையில் வைகை ஆற்றுக்குள் கூடுதல் பாலம் அமைக்கப்படாதது குறையாக இருந்தாலும், வருகிற சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்து தொடரவிருக்கும் திமுக ஆட்சியில் இந்தத் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.