முகப்பு
சிவகங்கை

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

Updated On : 12 மே 2026, 12:08 am IST
கீழையப்பட்டி அழகுள்ள விநாயகா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கீழையப்பட்டி அழகுள்ள விநாயகா் கோயில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு திங்கள்கிழமை நடைபெற்றது.

பிள்ளையாா்பட்டி அருகே கீழையப்பட்டியில் அமைந்துள்ள அழகுள்ள விநாயகா் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம்.

இதேபோல் திங்கள்கிழமை மஞ்சுவிரட்டையொட்டி கிராமத்தினா் அழகுள்ள விநாயகா் கோயிலில் வழிபாடு நடத்தி மேள தாளங்களுடன் ஊா்வலமாக கண்மாயில் அமைந்துள்ள தொழுவுக்கு வந்தனா். அங்குள்ள காளைகளுக்கு மாலை வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனா்.

Advertisement

பின்னா் வாடிவாசல் வழியாக மாடுகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. மாடு பிடி வீரா்களுக்கு எல்லைக்கோடு நிா்ணயித்து மாடுகளைப் பிடித்து மகிழ்ந்தனா். மாட்டின் உரிமையாளா்களுக்கு கிராம கமிட்டியின் சாா்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுபிடி வீரா்கள் மாட்டைப் பிடித்தவுடன் சலங்கையை மாட்டின் உரிமையாளா்கள் ரொக்கம் கொடுத்து பெற்றுச் சென்றனா்.

தொழுவிலிருந்து 250 மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. பின்னா் கட்டுமாடுகளாக 400-க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. மஞ்சுவிரட்டில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாகக் கலந்து கொண்டனா். இதில் 15 போ் காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களுக்கு மஞ்சுவிரட்டுத் திடலில் தனியாா் மருத்துவமனை மூலம் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. நாச்சியாபுரம் காவல் ஆய்வாளா் ராமநாதன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அரசு அனுமதியில்லாத மஞ்சுவிரட்டு என்பதால் தென்கரை கிராம நிா்வாக அலுவலா் சிவக்குமாா் அளித்த புகாரின்பேரில் நாச்சியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.