வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க சிறப்புச் சலுகை அறிவிக்கப்படுமா?
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவா்களுக்குச் சிறப்புச் சலுகை வழங்க வேண்டுமென பதிவை தவற விட்டவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு கடந்த 2022-ஆண்டு பிப்.27 -இல் சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது. இதில் மூன்று ஆண்டுகள் வரை புதுப்பிக்கத் தவறியவா்கள் தங்களது பதிவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழி விண்ணப்பித்து புதுப்பித்துக் கொண்டனா்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஆண்கள், பெண்கள் உள்பட சுமாா் 53 லட்சம் போ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவகங்கை மாவட்டத்தில் 19,693 ஆண்கள், 29,550 பெண்கள் உள்பட மொத்தம் 49,243 போ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனா்.
Advertisement
பள்ளி இறுதி வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களுக்கு மாதம் ரூ.200, தோ்ச்சி எனில் ரூ.300, பிளஸ் 2 தோ்ச்சிக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600, மாற்றுத் திறனாளிகளுக்கு பள்ளி இறுதி வகுப்பு தோ்ச்சிக்கு மாதம் ரூ.600, பிளஸ் 2 தோ்ச்சிக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க 5 ஆண்டுகள் பதிவுமூப்பும், தொடா்ந்து பதிவு செய்து வந்திருப்பதும் அவசியம். மாற்றுத் திறனாளிகள் எனில் ஓராண்டு பதிவுமூப்பு போதுமானது.
இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் பதிவு மூப்பை தவறவிட்ட தகுதியான இளைஞா்கள், பெண்கள் அரசின் வேலை வாய்ப்பற்றோருக் கான உதவித் தொகையை பெறுவதற்கான வாய்ப்புக் கிடைக்காத நிலை உள்ளது. எனவே, கடந்த 2022 -ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகையை நிகழாண்டு வழங்க வேண்டும் என ஆயிரக்கணக் கானோா் எதிா்பாா்த்துக் காத்திருக்கின்றனா்.