தேனி

ஆண்டிபட்டி பகுதியில் போதிய பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் அவதி

DIN

தேனி மாவட்டம்,  ஆண்டிபட்டி பகுதியில் சுற்றுவட்டார கிராமங்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால் பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.
ஆண்டிபட்டியில் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியன செயல்பட்டு வருகின்றன. இவை தவிர தனியார் பள்ளிகளும் உள்ளன. இவற்றில் ஆயிரக் கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். குறிப்பாக சுற்று வட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக் கணக்கான மாணவ, மாணவிகள் தினமும் பேருந்துகளில் வந்து செல்கின்றனர்.  
இந்நிலையில் பள்ளி நேரங்களில் போதிய பேருந்துவசதி இல்லாத காரணத்தால் கிராமப் புறங்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர்.  இதன்காரணமாக மாணவர்கள் கிடைக்கும் பேருந்துகளில் நெரிசலில் ஏறி, படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் மாலை நேரத்தில் பள்ளி முடிந்ததும் மாணவ, மாணவிகள் ஆண்டிபட்டி பேருந்து நிலையத்தில் தங்களது பகுதி பேருந்துக்காக  பல மணிநேரம் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. 
இதனால் பேருந்துநிலையத்துக்குள் பேருந்து நுழைவதற்கு முன்பாகவே மாணவர்களும், மாணவிகளும் ஓடிச் சென்று இடம் பிடிக்க வேண்டியதாக உள்ளது. இதனால் மாணவர்கள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 
மேலும் குறைவான பேருந்து இயக்கத்தால் வீடுகளுக்கு போய் சேர இரவு 7 மணிக்கு மேல் ஆகிவிடுவதால் மேற்கொண்டு பாடங்களை படிக்க முடியாமல் கல்வி பாதிக்கப்படுவதாக  மாணவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பள்ளி நேரமான காலை மற்றும் மாலை நேரங்களில் கிராமப் புறங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT