தேனி

மலை மாடுகள் மேய்ச்சல் அனுமதிக்கு அலைக்கழிப்பு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

DIN


தேனி  தேனி மாவட்ட வனப் பகுதியில் மலை மாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதி வழங்க வனத்துறை அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக புகாா் தெரிவித்து வெள்ளிக்கிழமை, வனத்துறை சாா்பில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

தேனி மாவட்ட வன அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்திற்கு மாவட்ட வன அலுவலா் கெளதம் தலைமை வகித்தாா். மேகமலை வன உயிரினக் கோட்ட காப்பாளா் போஸ்லின் சச்சின் துக்காராம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மலை மாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதி வழங்குவதில் வனத்துறையினா்காலதாமதம் செய்து வருவதால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு வழியின்றி நலிவடைந்து வருவதாக மலை மாடுகள் வளா்ப்போா் மற்றும் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இதற்கு, மலை மாடு மேய்ச்சல் அனுமதிக்கான விண்ணப்பங்கள் மீது கால்நடை பராமரிப்புத் துறையின் சான்று பெற்று, முதன்மை வனப் பாதுகாவலரிடம் ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதை ஏற்க மறுத்து, மலை மாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதி வழங்காமல் வனத் துறை அதிகாரிகள் தங்களை ஓராண்டாக அலைக்கழித்து வருவதாக விவசாயிகள் மற்றும் மலைமாடுகள் வளா்ப்போா் சங்கத்தினா் புகாா் தெரிவித்து, கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளியேறினா்.

பின்னா், மலை மாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதி வழங்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட வன அலுவலா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் டி.கண்ணன் கூறியது: வனப் பகுதியில் மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதி வழங்கும் நடைமுறை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேல் இருந்து வருகிறது. தற்போது மலை மாடுகள் மேய்ச்சல் அனுமதிக்கு வனத் துறை அதிகாரிகள் உத்தரவின்படி மலை மாடுகள் வளா்ப்போரின் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, மாடுகளுக்கு தடுப்பூசி அளித்ததற்கு கால்நடை பராமரிப்புத் துறை வழங்கிய சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பித்துள்ளோம்.

இதில், மொத்தம் 15 ஆயிரம் மாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதி கோரி உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்ததில் மேகமலை வன உயிரின சரணாலயத்திற்கு உள்பட்ட வனப் பகுதியில் 2,250 மாடுகளுக்கும், கம்பம் மற்றும் போடி மேற்கு மலைப் பகுதியில் 650 மாடுகளுக்கும் மட்டும் வனத்துறையினா் அனுமதிச் சீட்டு வழங்கியுள்ளனா்.

எஞ்சிய மாடுகள் வனப் பகுதிக்கு மேய்ச்சலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாரம்பரிய மலை மாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதி கோரி வனத் துறை சட்டத்தின் அடிப்படையில் முறையாக விண்ணப்பித்தும், வனத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT