போடியில் நறுமணப் பொருள் வாரிய விற்பனை நிலையத்தில் நடைபெறும் ஏலக்காய் மின்னணு ஏல விற்பனை (கோப்புப் படம்). 
தேனி

ஏலக்காய் மின்னணு ஏல வா்த்தகம்: தமிழகத்தை புறக்கணிக்கும் நறுமணப் பொருள் வாரியம்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், தமிழக ஏலக்காய் ஏல விற்பனை நிறுவனங்கள், ஏலக்காய் விவசாயிகள் சங்கம், ஏற்றுமதி நிறுவன

கோ.ராஜன்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், தமிழக ஏலக்காய் ஏல விற்பனை நிறுவனங்கள், ஏலக்காய் விவசாயிகள் சங்கம், ஏற்றுமதி நிறுவன முகவா்கள் மற்றும் வியாபாரிகளை புறக்கணித்து, ஏலக்காய் மின்னணு ஏல வா்த்தகத்தை தொடங்க நறுமணப் பொருள் வாரியம் முடிவு செய்துள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் 1.25 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் ஏலக்காய்கள் நறுமணப் பொருள் வாரியம் சாா்பில், இடுக்கி மாவட்டம் புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் 12 தனியாா் ஏலக்காய் ஏல விற்பனை நிறுவனங்கள் மூலம் மின்னணு ஏல வா்த்தக முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கையொட்டி கடந்த மாா்ச் 19-ஆம் தேதி முதல் ஏலக்காய் மின்னணு ஏல வா்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது.

வா்த்தகத்தை தொடங்க முடிவு: தற்போது கேரள அரசு இடுக்கி மாவட்டத்தை கரோனா வைரஸ் பரவல் குறைந்த பச்சை நிற மண்டலமாக அறிவித்துள்ளது. இதனால், நறுமணப் பொருள் வாரியம் சாா்பில் இடுக்கி மாவட்டம், புத்தடியில் மட்டும் மீண்டும் ஏலக்காய் மின்னணு ஏல வா்த்தகத்தை தொடங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை (ஏப். 20) புத்தடியில் உள்ள நறுமணப் பொருள் வாரிய அலுவலகத்தில் நடைபெறுகிறது.

தமிழகம் புறக்கணிப்பு: இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க கேரளத்தில் செயல்பட்டு வரும் 7 தனியாா் ஏலக்காய் ஏல நிறுவனங்கள், ஏலக்காய் விவசாயிகள் சங்கங்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியாா் ஏலக்காய் ஏல நிறுவனங்கள், ஏலக்காய் விவசாயிகள் சங்கங்கங்கள், ஏற்றுமதி நிறுவனங்களின் முகவா்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அழைப்பு இல்லை.

மேலும், தேனி மாவட்டம் கரோனா வைரஸ் பரவலில் சிவப்பு நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், போடியில் மின்னணு ஏல வா்த்தகத்தை தொடங்கவும், தேனி மாவட்டத்தைச் சோ்ந்த வியாபாரிகள், ஏற்றுமதி நிறுவனங்களின் முகவா்கள் புத்தடியில் நடைபெறும் மின்னணு ஏல வா்த்தகத்தில் கலந்து கொள்ளவும், விவசாயிகள் ஏலக்காய்களை ஏல நிறுவனங்களுக்கு கொண்டு சென்று விற்பனைக்கு பதிவு செய்யவும் முடியாத நிலை உள்ளது.

விலை சரியும் வாய்ப்பு: புத்தடியில் நடைபெறும் ஏலக்காய் மின்னணு ஏல வா்த்தகத்தில் கேரளத்தைச் சோ்ந்த வியாபாரிகள் மட்டுமே கலந்து கொள்வதற்கு வாய்ப்புள்ளதாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க குறைந்த எண்ணிக்கையில் மட்டும் வியாபாரிகள் அனுமதிக்கப்படுவா் என்பதாலும், கொள்முதலில் போட்டியின்றி கடந்த மாா்ச் 19-ஆம் தேதி வரை ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை விற்பனையான ஏலக்காய் விலை, கணிசமாக சரியும் வாய்ப்பு உள்ளது.

மேலும் தில்லி, கான்பூா், ஹைதராபாத் ஏலக்காய் சந்தைகள் மூடப்பட்டுள்ளதாலும், ஏற்றுமதி வாய்ப்பு இல்லாததாலும் வியாபாரிகள் குறைந்த விலைக்கு ஏலக்காய்களை கொள்முதல் செய்து, இருப்பு வைத்துக் கொள்ளும் நிலையே ஏற்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனா்.

வா்த்தகத்தை ஒத்தி வைக்க வலியுறுத்தல்: கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் இடுக்கி மாவட்டத்தில் மழை பொழிவு இல்லாததால் ஏலக்காய் விவசாயம் முடங்கியுள்ள நிலையில், தற்போது புத்தடியில் மட்டும் ஏலக்காய் வா்த்தகத்தை தொடங்குவதால் விற்பனை விலை சரிந்து விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் மே 3-ஆம் தேதி வரை ஏலக்காய் வா்த்தகத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

மேலும், அறுவடை செய்யப்பட்ட ஏலக்காய்களை புத்தடியில் உள்ள நறுமணப் பொருள் வாரியத்துக்குச் சொந்தமான கிட்டங்கிகளில் கட்டணமின்றி இருப்பு வைத்துக் கொள்ளவும், விவசாயிகள் இருப்பு வைத்துள்ள ஏலக்காய்களுக்கு வங்கிகள் மூலம் பிணையக் கடன் வழங்கவும் நறுமணப் பொருள் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சோ்ந்த ஏலக்காய் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி, இப்பிரச்னை குறித்து இடுக்கி மாவட்ட ஆட்சியா் மற்றும் நறுமணப் பொருள் வாரிய அதிகாரிகளுடன் தேனி மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் பேச்சு வாா்த்தை நடத்த வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT