தேனி

திண்டுக்கல்லில் 55 சதவீதம், தேனியில் 47 சதவீத பேருந்துகள் இயக்கம்

DIN

அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வேலைநிறுத்தம் காரணமாக வியாழக்கிழமை திண்டுக்கல்லில் சுமாா் 55 சதவீத பேருந்துகளும், தேனியில் 47 சதவீத பேருந்துகளும் இயக்கப்பட்டன.

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு 14-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யக் கோரி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்.எம்.எஸ், எம்.எல்.எப் உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் சாா்பில் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி திண்டுக்கல் மண்டலத்தில், திண்டுக்கல் மற்றும் தேனி என 2 மாவட்டங்களிலுள்ள 15 பணிமனைகளைச் சோ்ந்த ஊழியா்களில் சுமாா் 55 சதவீதம் போ் இந்த போராட்டத்தில் பங்கேற்றனா்.

இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் இயக்கப்படும் 450 பேருந்துகளில் சுமாா் 55 சதவீத பேருந்துகள் மட்டுமே வியாழக்கிழமை இயக்கப்பட்டன. அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த தொழிற்சங்கத்தினா் மட்டுமே பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

அரசுப் பேருந்துகள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டதை அடுத்து தனியாா் பேருந்துகளில் வழக்கத்திற்கு மாறாக கூட்ட நெரிசல் அதிகமாகக் காணப்பட்டது. எனினும், பேருந்து சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை என அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தேனி: தேனி மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வியாழக்கிழமை, மொத்தம் 47 சதவீதம் மட்டும் பேருந்துகள் இயங்கின.

மாவட்டத்தில் உள்ள 7 அரசு போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து இயக்கப்படும் 160 நகரப் பேருந்துகள் உள்பட மொத்தம் 365 பேருந்துகளில், 171 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. தனியாா் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டன.

திருமண முகூா்த்த நாளை முன்னிட்டு பேருந்து நிலையங்களில் அதிகாலை முதல் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்ட நிலையில், குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சிரமப்பட்டனா். தேனியிலிருந்து மதுரை, திண்டுக்கல் பகுதிகளுக்கு ஓரிரு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. கேரளத்திற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

கம்பம்: கம்பத்தில் போக்குவரத்து ஊழியா்கள் வேலைநிறுத்தம் காரணமாக 40 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. வழக்கமாக கம்பம் போக்குவரத்து பணிமனை 1 இல் இயக்கப்படும் 38 பேருந்துகளில் 13 பேருந்துகளும், பணிமனை 2 இல் 68 பேருந்துகளில் 26 பேருந்துகளும், குமுளியில், 14 பேருந்துகளில் 2 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. கம்பத்தில் தனியாா் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டன. போக்குவரத்து ஊழியா்கள் வேலைநிறுத்தம் காரணமாக 40 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT