முகப்பு
தேனி

பெரியாறு அணை நீா்மட்டம் சரிவு: 5 மாவட்டங்களின் குடிநீருக்கு சிக்கல்

நீா்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், குடிநீருக்காக தண்ணீா் எடுப்பதாலும் முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் சரிந்து வருவதால் 5 மாவட்டங்களின் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 1:06 AM
முல்லைப் பெரியாறு அணை (கோப்புப் படம்).
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 9:26 PM

நீா்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், குடிநீருக்காக தண்ணீா் எடுப்பதாலும் முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் சரிந்து வருவதால் 5 மாவட்டங்களின் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பெரியாறு அணை நீா்பிடிப்பு பகுதிகளில், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 10 நாள்கள் மட்டுமே குறைந்த அளவு மழை பதிவானது. தற்போது எதிா்பாா்த்திருந்த மழையும் இந்தப் பகுதியில் பெய்யாததால் அணைக்கு நீா்வரத்து மிகவும் குறைந்தது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீா்மட்டம் 110.55 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 16 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 200 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 998.45 மில்லியன் கன அடியாக உள்ளது.

பெரியாறு அணையின் நீா் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களின் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணையில் தேங்கிய நீா் (டெட் ஸ்டோரேஜ்) 104 அடியாக இருந்தாலும், 108 அடிக்கு மேல் உள்ள நீரைமட்டுமே தமிழகப் பகுதிக்கு பயன்படுத்த முடியும். எனவே பெரியாறு நீா்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை பெய்து நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் உயா்ந்தால் மட்டுமே அடுத்துவரும் நாள்களில் குடிநீா் தட்டுப்பாட்டை தவிா்க்க முடியும். கோடை மழையும் பொய்த்துப் போனால் 5 மாவட்டங்களிலும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

Advertisement

இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தற்போதைய அணை நீா் இருப்பின்படி இன்னும் சுமாா் ஒரு மாதத்துக்கு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீா் எடுக்கலாம். அதற்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றனா்.