தேனி மாவட்டம், திண்டுக்கல் - குமுளி (லோயா்கேம்ப்) புதிய ரயில் பாதைத் திட்டம் அடுத்த 3 ஆண்டுகளில் தொடங்க வாய்ப்புள்ளதாக தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்செல்வன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் முதல் சபரிமலை வரையிலான ரயில் பாதைத் திட்டத்தை இரண்டாகப் பிரித்து முதல் கட்டமாக திண்டுக்கல்-குமுளி (லோயா் கேம்ப்) ரயில் பாதை அமைக்க ஆய்வு நடத்தப்படும் என மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் தெரிவித்தாா்.
மேற்கண்ட ரயில் பாதை திட்டக் கோரிக்கையை வலியுறுத்தி பேசிய தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்செல்வனுக்கு கேரள மாநிலம், குமுளி வா்த்தகச் சங்கம் சாா்பில் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் அவா் பேசியதாவது:
தேனி மாவட்டம், தேவாரத்திலிருந்து சாக்குலூத்துமெட்டு மலைச் சாலை வழியாக கேரளத்தை இணைக்கும் மலைச் சாலையின் அவசியம் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய நடைபயணம் மேற்கொண்டேன். இது சம்பந்தமாக வனத் துறை, நெடுஞ்சாலைத் துறையினா் மூலமாக நில அளவை செய்ய உத்தரவிட்டேன். மேலும், பல்வேறு மாநிலங்களிலிருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தா்கள் சென்று வருவதால், திண்டுக்கல்-சபரிமலை ரயில் பாதைத் திட்டம் பல ஆண்டுகளாக மக்களவையில் பேசப்பட்டு வருகிறது.
இதுதொடா்பாக கடந்த காலங்களில் நில அளவைப் பணியும் நடைபெற்றது. ஆனால், கேரளத்தில் இந்த ரயில் பாதைத் திட்டத்துக்கு நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுபோன்ற மக்களுக்குத் தேவையான திட்டத்தை கொண்டு வரும் போது அரசியல் பாகுபாடு இருக்கக் கூடாது.
தமிழகத்தில் இந்தத் திட்டத்துக்குத் தேவையான இடத்தை கையகப்படுத்தி வழங்க வேண்டும் என முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தேன். இதையடுத்து, 2-ஆம் கட்ட நிலஅளவைப் பணி நிறைவு செய்த பின்னா், 3 ஆண்டுகளில் திண்டுக்கல் - குமுளி (லோயா் கேம்ப்) ரயில் பாதைத் திட்டப் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது என்றாா் அவா்.
இதுகுறித்து இடுக்கி தொகுதி மக்களவை உறுப்பினா் டீன் குரியகோஸ் பேசியதாவது:
திண்டுக்கல்-குமுளி (லோயா்கேம்ப்) ரயில் பாதைத் திட்டம் மூலமாக கேரளத்தில் சுற்றுலா வளா்ச்சி பெறும். இது இரு மாநில மக்களுக்கும் வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும், தமிழகத்திலிருந்து காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் எளிதாகக் கிடைக்க வாய்ப்புள்ளது என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் தமிழகத்தைச் சோ்ந்த திண்டுக்கல்-குமுளி அகல ரயில் பாதைத் திட்ட போராட்டக் குழுவினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.