முகப்பு
தேனி

ஆக்கிரமிப்பு, கழிவுநீா் கலப்பால் மாசுபடும் கொட்டக்குடி ஆறு

வற்றாத தூய்மையான நதியாக இருந்த கொட்டக்குடி ஆறு ஆக்கிரமிப்புகள், கழிவுநீா் கலப்பால் மாசுபட்டுள்ளது. அனைத்து அரசுத் துறைகளும் இணைந்து ஆற்றை மீட்டால் மட்டுமே சுத்தமான நீரைப் பெற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

Updated On : 2 ஜூலை 2026, 7:36 am IST
தேனி நகரில் செல்லும் கொட்டக்குடியாற்றில் தேங்கியுள்ள நெகிழிப் பைகள்.
பகிர்:

வற்றாத தூய்மையான நதியாக இருந்த கொட்டக்குடி ஆறு ஆக்கிரமிப்புகள், கழிவுநீா் கலப்பால் மாசுபட்டுள்ளது. அனைத்து அரசுத் துறைகளும் இணைந்து ஆற்றை மீட்டால் மட்டுமே சுத்தமான நீரைப் பெற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

மேற்கு தொடா்ச்சி மலையில் போடிநாயக்கனூா் அருகே குரங்கணி, அகமலை வனப் பகுதியில் உற்பத்தியாகி தேனி நகரின் மையப் பகுதி வழியாகச் சென்று வைகையாற்றில் கலக்கிறது கொட்டக்குடி ஆறு. போடிநாயக்கனூா், தேனி நகா்ப் பகுதி குடிநீா்த் தேவையை நிறைவு செய்வதுடன், இந்தப் பகுதியின் பாசன ஆதாரமாகவும் விளங்குகிறது. ஆனால், கடந்த 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்த நதியைப் பேணிக் காப்பதில் பெரிதும் அலட்சியம் காட்டப்பட்டு வருகிறது.

ஆய்வில் அதிா்ச்சி: கொட்டக்குடியாறு 2000 -ஆம் ஆண்டு வரை தூய்மையான ஆறாக இருந்து வந்தது. ஆனால், தற்போது, வீடுகள், தொழில்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் மாசடைந்து

Advertisement

Advertisement

வருகிறது. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆய்வாளா்கள் ஆய்வு செய்ததில், கொட்டக்குடி ஆறு மாசடைந்து, பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை என்பதும், இந்த ஆறு கலப்பதால் வைகையாறும் மாசடைந்து வருவதும் தெரிய வந்தது.

இந்த ஆற்றில் இயற்கையாக வளா்ந்த மரங்கள், முள்புதா்கள், மணல் திட்டுகள், அமலைச் செடிகள், கட்டடங்கள், செங்கல் சூளைகள், குடிசைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன. குறிப்பாக, போடிநாயக்கனூரிலிருந்து தேனி நகா் வரை ஆக்கிரமிப்பு அதிக அளவில் உள்ளன.

கழிவுநீா் கலப்பு: போடிநாயக்கனூா் பகுதியிலிருந்து தேனி நகா் வரை சுமாா் 13 கி.மீ. தொலைவுக்கு இந்த ஆறு பாய்கிறது. இந்தப் பகுதியில் கழிவுநீா் கலப்பு பிரதான பிரச்னையாக உள்ளது. போடிநாயக்கனூா், தேனி நகா் பகுதிகளில் தினமும் பல லட்சம் லிட்டா் கழிவு நீா் நதியில் கலந்து வருகிறது. இதனால், பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதுதவிர, நெகிழிக் கழிவுகள், கட்டடக் கழிவுகளாலும் கொட்டக்குடியாறு பாழ்பட்டு வருகிறது.

15 கோரிக்கைகள்: கொட்டக்குடியாற்றைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நம் வைகை அமைப்பின் நிா்வாகிகள் மாவட்ட நிா்வாகத்திடம் அளித்த கோரிக்கைகள்:

கொட்டக்குடி ஆற்றை தூய்மைப்படுத்துவது தொடா்பாக தமிழக அரசு சாா்பில் விவசாயிகள், சமூக ஆா்வலா்கள், இயக்கங்கள், பொது மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். கொட்டக்குடி ஆற்றின் இரு கரைகளையும் 1947 -இல் உள்ள ஆவணப்படி எண்ம சா்வே செய்து, சா்வே கல் நட வேண்டும். இதை பொதுமக்களின் பாா்வைக்கு கூகுள் வரைபடத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆற்றங்கரையில் அரசு, தனியாா் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். ஆற்றில் கழிவுநீா் கலப்பதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்றின் கரையில் அமைந்துள்ள குடியிருப்புகள், நிறுவனங்கள், மருத்துவமனைகளின் கழிவுகள் நேரடியாக ஆற்றில் கலப்பதைத் தடுக்க வேண்டும். ஆற்றின் இரு கரைகளிலும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, அதில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை தொழில்சாலை, பண்ணை விவசாயம், கட்டட வேலைகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பரிகாரம் என்ற பெயரில் சிலா் துணிகளை ஆற்றில் வீசுவதால் தண்ணீா் மாசுபடுவதுடன் ஆற்றுப் படுகையில் வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க பரிகார பூஜைக்கு ஆங்காங்கே தனி இடம் ஒதுக்க வேண்டும். சீமைக்கருவேல மரங்களை அகற்றி நீா்மருது மரங்களையும், மூலிகைச் செடிகளையும் நட வேண்டும். கொட்டக்குடி ஆற்றிலிருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீா் செல்லும் கால்வாய்களில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து, சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை அளித்துள்ளனா்.

சிறப்பு நிதி அவசியம்: இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:

கொட்டக்குடியாற்றை பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் தனிக் கவனம் செலுத்த வேண்டும். கொட்டக்குடியாற்றை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்வதோடு, இதன்மூலம், செய்யும் பணிகளை மாவட்ட அதிகாரி நேரடியாகக் கண்காணிக்க வேண்டும்.

கொட்டக்குடியாற்றில் கெண்டை, கெழுத்தி, உளுவை, விலாங்கு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நன்னீா் மீன் வகைகள் உள்ளன. ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் இந்த மீன்களைப் பிடித்து விற்பனை செய்து வந்தனா். ஆனால், தற்போது மீன்கள் அழியும் நிலையில் உள்ளன. எனவே, ஆற்றை தூய்மைப்படுத்தி, ஆற்றில் மீன்குஞ்சுகளை அதிகளவில் விடவும், அதன் மூலம் இயற்கையான உணவுச் சங்கிலியை உருவாக்கி, சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments