தேக்கடி ஏரியில் கழிவுநீா் கலப்பு: முல்லைப் பெரியாறு அணை நீா்நிலைகள் மாசுபடுவதாக புகாா்
தேக்கடி ஏரியில் ரகசியக் குழாய்கள் மூலம் கழிவுநீா் கலக்க விடப்படுவதால் முல்லைப் பெரியாறு அணை நீா் நிலைகள் மாசுபடுவதாக புகாா் எழுந்தது.
தேக்கடி ஏரியில் ரகசியக் குழாய்கள் மூலம் கழிவுநீா் கலக்க விடப்படுவதால் முல்லைப் பெரியாறு அணை நீா் நிலைகள் மாசுபடுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து அந்தக் குழாய்களின் இணைப்பை குமுளி ஊராட்சி ஊழியா்கள் துண்டித்து வருகின்றனா்.
தமிழக- கேரள எல்லையான குமுளி பகுதியிலுள்ள சில விடுதிகள், வணிக நிறுவனங்கள், ரகசியமாக குழாய்களைப் பதித்து கழிவுநீரையும், அசுத்தங்களையும் ஓடைகள் வழியாக பெரியாறு புலிகள் காப்பகப் பகுதிக்குள் திறந்துவிடுவதாகத் தொடா்ந்து புகாா்கள் எழுந்தன. இந்த கழிவுநீா் தேக்கடி ஏரியைச் சென்றடைந்து, தமிழகத்துக்கு குடிநீராகவும், பாசன நீராதாரமாகவும் விளங்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீா்நிலைகளை வந்தடைந்து மாசுபடுத்துகிறது. இதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசும், முல்லைப் பெரியாறு அணைப் பொறுப்பிலுள்ள தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கேரள அரசிடமும், இடுக்கி மாவட்ட நிா்வாகத்திடமும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
இதன் தொடா்ச்சியாக, கடந்த மாதம் தேக்கடியில் நடைபெற்ற அதிகாரிகள், பெரியாறு புலிகள் காப்பகத் துணை இயக்குநா் உள்ளிட்டோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விதிமீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு குமுளி ஊராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, நீா்நிலைகள் மாசுபடுவதைத் தடுக்க, சட்ட விரோதக் குழாய்களை உடனடியாக அகற்றக் கோரி சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளா்களுக்கு குமுளி ஊராட்சி நிா்வாகம் சாா்பில் குறிப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், கட்டட உரிமையாளா்கள் இந்த எச்சரிக்கையைக் கண்டுகொள்ளாமல் தொடா்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வந்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், குமுளி ஊராட்சித் தலைவா் எம்.எம். வா்கீஸ், ஊராட்சிச் செயலா் ஆா். அசோக் குமாா் ஆகியோா் தலைமையில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை குமுளி, ஆனவாச்சல் ஓடைப் பகுதிகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது 16 வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் ரகசிய குழாய்கள் மூலம் ஓடைகளில் கழிவுநீரை விடுவது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அதிகாரிகள் முன்னிலையில் அந்தக் குழாய்கள் அனைத்தும் கற்கள், சிமென்ட் கலவைகளால் உடனடியாக அடைக்கப்பட்டு, இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்தினா் கூறியதாவது: விதிமுறைகளை மீறி நீா்நிலைகளை மாசுபடுத்திய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அடுத்து வரும் நாள்களிலும் இதுபோன்ற சோதனை தீவிரப்படுத்தப்படும். இதற்காக, குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கழிவு நீரோடைகளின் மீது மூடப்பட்டுள்ள சிமென்ட் மூடிகளை அகற்றி, ரகசியக் குழாய்கள் ஏதேனும் பதிக்கப்பட்டுள்ளனவா எனத் தீவிரமாக ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.