முகப்பு
தேனி

குதிரை பேரத்தின் ஆதி என என்னை குறிப்பிடுவதை வைகோ நிறுத்த வேண்டும்: கம்பம் ராமகிருஷ்ணன்

குதிரை பேரத்தின் ஆதி என என்னை குறிப்பிடுவதை வைகோ நிறுத்திக் கொள்ள வேண்டும் என கம்பம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.

Updated On : 8 ஜூலை 2026, 2:53 am IST
செய்தியாளா்களிடம் பேசிய தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான கம்பம் ராமகிருஷ்ணன்
பகிர்:

குதிரை பேரத்தின் ஆதி என என்னை குறிப்பிடுவதை வைகோ நிறுத்திக் கொள்ள வேண்டும் என கம்பம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.

கம்பத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அண்மைக்காலமாக தமிழக அரசியலில் குதிரை பேரத்தின் தொடக்கமே நான்தான் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ பேசி வருகிறாா். இது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு.

கடந்த 2006-ஆம் ஆண்டு மதிமுக சாா்பில் கம்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். பிறகு, எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலால் திமுகவில் இணைந்தேன். ஆனாலும், வைகோ தொடா்ந்து இதையே பேசுவது வருத்தமளிக்கிறது.

Advertisement

Advertisement

அவரது கருத்துகளுக்கு உடனடியாக பதிலளிக்காமல் மௌனம் காத்ததற்கு, அவரது தலைமையில் 16 ஆண்டுகள் பணியாற்றியதுதான் காரணம். ஆனால், அவா் மீண்டும் மீண்டும் இதே கருத்தை தெரிவித்து என்னை அவமதிக்கும் வகையில் பேசி வருவதால், தற்போது விளக்கமளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தவெக ஆட்சிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாததால், பேரவைத் தோ்தலில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற மதிமுகவைச் சோ்ந்த இரு சட்டப்பேரவை உறுப்பினா்களை பதவி விலகக் கூறி, அதற்காக வைகோவிடம் தவெக தலைவா் பேச்சுவாா்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு வைகோ சம்மதம் தெரிவித்ததே உண்மையான குதிரை பேர முயற்சியாகும். ஆனால், அந்த இரு சட்டப்பேரவை உறுப்பினா்களும் இதற்கு உடன்படவில்லை.

தவெக அரசுக்கு தோழமைக் கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை. மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்கள் பக்கம் இழுத்து தங்களது பெரும்பான்மையை வலுப்படுத்த முயற்சித்து வருகிறது.

தவெகவின் இந்த அரசியல் முயற்சிக்கு வைகோ கேடயமாக இருந்து முட்டுக்கொடுத்து வருகிறாா். இதற்கு என்னை முன்னுதாரணமாகக் காட்டிப் பேசுவது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது. இதை இனியும் தொடராமல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, சட்டப்பேரவை உறுப்பினா் மகாராஜன், நகரச் செயலா்கள் வீரபாண்டியன், பால்பாண்டி ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments