விருதுநகர்

நரிக்குடியிலிருந்து மானாமதுரைக்கு கூடுதல் பேருந்து இயக்கக் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி தர்மம், தேளி வழியாக மானாமதுரைக்கு, கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என்று இப்பகுதி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி தர்மம், தேளி வழியாக மானாமதுரைக்கு, கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என்று இப்பகுதி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக நரிக்குடி வட்டார மாணவர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரனுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

நரிக்குடி பகுதியில் போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் தினமும் 8 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொள்ளும் நிலையில் உள்ளனர். மணிக்கட்டியேந்தல், மறையூர், தர்மம், தேளி, கொட்டக்காச்சியேந்தல் கிராமங்களிலிருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், நரிக்குடியில் படிக்கின்றனர். மேலும், இப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் நரிக்குடி வந்து, பிற நகரங்களுக்கு செல்கின்றனர். ஆனால், பள்ளி கல்லூரி செல்ல உரிய நேரத்தில் பேருந்து வசதி இல்லை. தேளி, தர்மம் வழியில், காலை 6 மணிக்கே பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்தில் மாணவர்கள் செல்ல முடியாது. இதே போல், மாலையில் 4 மணிக்கு நரிக்குடியில் இருந்து அரசுப் பேருந்து கிளம்பி விடுகிறது. பள்ளி முடிய 4.30 மணியாகிறது. இருவேளையுமே, மாணவர்கள் 8 கி.மீ. வரை நடக்கின்றனர். இதனால், அரசு இலவச பேருந்து பாஸ் வழங்கியும் பயனில்லை.

நரிக்குடியிலிருந்து தர்மம், தேளி வழியாக, மானாமதுரைக்கு 22 கி.மீ. ஆகும். இந்த வழித்தடத்தில், மறையூர், தர்மம், தேளி உட்பட 15-க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவ்வழியே 2 முறை மட்டுமே இயக்கப்படுகிற பேருந்தால் எந்தப் பயனுமில்லை. வேலைக்கு சென்று வரும் மக்கள், குறிப்பிட்ட நேரத்துக்குச் செல்ல முடியாமல், அவதிப்படுகின்றனர். நரிக்குடியிலிருந்து தேளி வழியாக 10 ரூபாய் செலவில், 22 கி.மீ. தூரத்தில் மானாமதுரை செல்வதற்குப் பதில், பேருந்து வசதி இல்லாத காரணத்தால், பார்த்திபனூர் வழியாக 20 ரூபாய் செலவில், 32 கி.மீ. தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பணம் செலவாவதுடன் நேரமும் அதிகமாகிறது. மாணவர்களுக்கு பயன் ஏற்படும் வகையில், காலை மற்றும் மாலையில், பள்ளி நேரத்திற்கு ஏற்ப பேருந்துகளை இயக்கவேண்டும். வருகிற கல்வியாண்டிலாவது, பள்ளி நேரத்துக்கு பேருந்து வருமா என, மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதே நேரத்தில் அனைவரும் பயனடையும் வகையில், நரிக்குடியிலிருந்து தேளி வழியாக மானாமதுரைக்கு, கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT