விருதுநகர்

திருக்குறளை 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க நடவடிக்கை: முகிலை ராஜபாண்டியன்

DIN

மத்திய அரசின் உத்தரவின்பேரில், திருக்குறளை 22 மொழிகளில்  மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முகிலை ராஜபாண்டியன் கூறினார்.
     சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் ஆண்டுக்கு சுமார் 100 பேர் பார்வையற்றவர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர். இவர்களுக்கு பிரெய்லி முறையில் பாடங்களை படிக்கும் முறை , செம்மொழி மத்திய நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    செம்மொழியின் பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக, ஆண்டுக்கு ஒரு ஒலி, ஒளி பாடத்திட்டம் வழங்க வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை பரிந்துரை செய்துள்ளது. இதற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதற்கான பணியும் நடைபெற்று வருகிறது.
     செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கென நிர்வாகக் கட்டடம் கட்டுவதற்கு,  தமிழக அரசு சென்னை பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது. இந்தக் கட்டடம் கட்ட ரூ. 24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் கட்டமாக ரூ. 13 கோடி நிதியில் கட்டடம் கட்டும் பணியை மத்திய அரசின் பொதுப்பணித் துறையினர் செய்து வருகின்றனர். நான்கு தளங்கள் கொண்ட இந்தக் கட்டடம் விரைவில் கட்டி முடிக்கப்படும்.
    ஆய்வுத் திட்டம், கல்லூரிகளில் கருத்தரங்கம், பயிலரங்கம் ஆகியன நடத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த நிறுவனம் மூலம் கலைஞர் விருது 2010-2011 முதல் கடந்த 7ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. விரைவில், இந்த 7ஆண்டுக்கான மொத்த விருதுகளும் வழங்கப்பட உள்ளன.
    இலக்கியம் தொடர்பான ஆய்வு, கலை, பண்பாடு குறித்த ஆய்வு செய்பவர்களுக்கு கலைஞர் விருது வழங்கப்படும். விருதுகளை பெறுவதற்கான தகுதியானவர்களை தேர்வுக் குழு விரைவில் தேர்வு செய்யும். இனி ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும்.
    திருக்குறளை 22 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து, தெலுங்கு, கன்னடம், குஜராத், பஞ்சாபி, மணிப்பூரி உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, குஜராத் மொழியில் பிரதமர் மோடி திருக்குறளை வெளியிட்டுள்ளார். மீதமுள்ள மொழிகளில் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. வக்கிரி போலோ என்ற நரிக்குறவர் மொழியிலும் திருக்குறள் மொழி பெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT