இருக்குன்குடி மாரியம்மன் கோயில் தங்கும் விடுதிகள் சீரமைக்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கும் இடவசதி இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கும் இடவசதி இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இருக்கன்குடியில், 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது.
மிகவும் பிரசித்திபெற்ற இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறுபகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக தை, ஆடி மாதங்களில் தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் இக்கோயிலில் பக்தர்கள் வசதிக்காக இரண்டு இடங்களில் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு விடுதியில் 15 அறைகள் உள்ளன.
அதனை கோயில் பூசாரிகள் முன்கூட்டியே பதிவு செய்து, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வாடகைக்கு விடுவதாகக் கூறப்படுகிறது. கோயில் அருகே உள்ள மற்றொரு தங்கும் விடுதி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி, சிதிலமடைந்துள்ளது.
கோயில் நிர்வாகம் சார்பில் தங்கும் இடவசதி செய்து தராததால், பக்தர்கள் கோயில்
அருகே ஆற்றுப்படுகையில் தனியாரால் அமைக்கப்பட்டுள்ள தகர செட்களில் அதிக விலை கொடுத்து தங்க வேண்டியுள்ளது.
பராமரிப்பில்லாத மண்டபங்கள்: இதேபோல், கோயில் நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டுள்ள சக்தி மண்டபம், விஐபி மண்டபம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மண்டபங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி, சேதமடைந்துள்ளது. இந்த மண்டபங்களில் முறையாக குடிநீர், மின்சார வசதி செய்யப்படவில்லை. மேலும் சுகாதார சீர்கேடாக உள்ளது. எனவே அறநிலையத்துறையினர், தங்கும் விடுதி, மண்டபங்களை புதுப்பித்து பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.