ரெட்டியபட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தர கிராம மக்கள் கோரிக்கை
சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட ரெட்டியபட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர ஊராட்சி நிர்வாகம்
சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட ரெட்டியபட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெட்டியபட்டி கிராமத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள வடிகால், கழிப்பறைகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. இதனால் அவை சிதிலமடைந்துள்ளன.
தற்போது, வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது. மேலும், பொது கழிப்பிடம் பராமரிக்கப்படாததால், திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், தெரு பகுதியில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் குடிநீர் வருவதில்லை. இதனால், கிராம மக்கள் ஒரு குடம் குடிநீர் ரூ.12 செலுத்தி விலைக்கு வாங்கி வருகின்றனர். இதேபோல், தெரு விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் கிராம மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுதொடர்பாக கிராமத்தினர் வெம்பக்கோட்டை ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ரெட்டியபட்டி கிராமத்தை ஊராட்சி நிர்வாகம் புறக்கணிப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, இனியாவது வடிகால், கழிப்பறை, தெருவிளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.