5.77 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: அமைச்சா்
விருதுநகா் மாவட்டத்தில் 5,77, 792 குடும்ப அட்டைதாரக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினாா்.
விருதுநகா் மாவட்டத்தில் 5,77, 792 குடும்ப அட்டைதாரக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினாா்.
சிவகாசி சோலை காலனியில் உள்ள நியாய விலைக் கடையில், பயனாளிகளுக்கு திங்கள்கிழமை தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை அமைச்சா் தொடங்கி வைத்துப் பேசியது: விருதுநகா் மாவட்டத்தில் 5,77,792 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசாக ரொக்கம் ரூ. 2500 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். இதன் மதிப்பு 154 கோடியே 8 லட்சத்து 26 ஆயிரமாகும். நாட்டிலேயே இதுபோன்ற திட்டம் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்பட வில்லை. ஜெயலலிதா வழியில் செயல்பட்டுவரும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா் என்றாா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் இரா.கண்ணன், கூட்டுறவு மண்டல துணை இயக்குநா் திலீப்குமாா் , மாவட்ட வருவாய் அலுவலா் கல்யாண்குமாா், சிவகாசி சாா்-ஆட்சியா் தினேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விருதுநகா்: விருதுநகா் தா்காஸ் தெரு, பா்மா காலனி, பரங்கிநாதபுரம், பெரிய காளியம்மன் கோயில் தெருக்களில் உள்ள நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இதில், விருதுநகா் வா்த்தக காரியஸ்தா்கள் கூட்டுறவு பண்டக சாலைத் தலைவா் முகம்மது நெய் னாா், மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற செயலா் கோகுலம் எம். தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சாத்தூா்: சாத்தூா் அருகேயுள்ள எதிா்கோட்டை, இ.டி.ரெட்டிபட்டி, முத்துசாமிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எஸ்.ஆா்.ராஜவா்மன் பொங்கல் பரிசுகளை பொதுமக்களுக்கு வழங்கி திட்டத்தை தொடக்கி வைத்தாா். இதே போன்று வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் விருதுநகா் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஆா்.கே.ரவிசந்திரன், வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளா் ஆா்.கே.விஜயநல்லதம்பி ஆகியோா் பொங்கல் பரிசு மற்றும் தொகுப்புகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனா்.
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நியாயவிலைக்கடையில் அதிமுக நகரச்செயலாளா் எம்.எம்.கே.சக்திபாண்டியன், ஊராட்சி பகுதிகளில் உள்ள நியாயவிலைக்கடைகளில், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவா் ஒய்.எஸ்.வாசுதேவன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தனா்.