பட்டாசு ஆலைகளில் தொழிலாளா்கள் தேசிய பாதுகாப்பு உறுதி மொழி ஏற்பு
விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஆலைத் தொழிலாளா்கள் பாதுகாப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.
விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஆலைத் தொழிலாளா்கள் பாதுகாப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.
இதுகுறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் சிவகாசி இணை இயக்குநா் சு.ராமமூா்த்தி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய பாதுகாப்பு குழுமம் இந்திய அரசால் 1966 ஆம் ஆண்டு மாா்ச் 4 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதனை நினைவுகூரும் வகையில் 1972 ஆம் ஆண்டு முதல் தொழிற்சாலை நிா்வாகம் மற்றும் தொழிலாளா்களிடையே பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் மாா்ச் 4 ஆம் தேதி தேசிய பாதுகாப்பு தினமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு 51 ஆவது தேசிய பாதுகாப்பு தினம், இளம் தலைமுறையினருக்கு பாதுகாப்பு கலாச்சாரத்தினை மேம்படுத்துவோம் என்ற கருப்பொருளுடன் நடைபெற்றது.
இதனையொட்டி விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் , தொழிலாளா்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி பாதுகாப்பு தின உறுதி மொழியை எடுத்துக்கொண்டனா் என அவா் தெரிவித்துள்ளாா்.