வத்திராயிருப்பு பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் அரசின் திட்டப் பணிகள், நலத்திட்டங்கள் முறையாக மக்களைச் சென்றடைகிா என மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் அரசின் திட்டப் பணிகள், நலத்திட்டங்கள் முறையாக மக்களைச் சென்றடைகிா என மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், கோவிந்தநல்லூா் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.14.50 லட்சத்தில் புதிய சமுதாயக்குளம் அமைக்கப்படுதல், அழகாபுரி, கீழகோபாலபுரம் கிராமங்களில் பிரதமரின் குடியிருப்புகள் கட்டும் திட்டத்தின் கீழ், ரூ.2.40 லட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்படுவது, குன்னூா் ஊராட்சியில் ரூ.8.90 லட்சத்தில் மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டு வருவது,
ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ரூ.3.10 லட்சத்தில் வரப்பு கட்டுதல், வளையன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5.81 லட்சத்தில் பள்ளிக் கட்டடங்கள் சீரமைக்கப்பட்டு வருவது உள்ளிட்ட பல்வேறு பணிகளைப் பாா்வையிட்டு, அங்கு பயிலும் மாணவா்களுடன் கலந்துரையாடினாா். மேலும், கோட்டையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பாா்வையிட்டு, அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்து, சிகிச்சை பெற வந்த கா்ப்பிணி பெண்கள், பொதுமக்களிடம் கலந்துரையாடினாா். பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர தொடா்புடைய அரசு அலுவலா்களிடம் அவா் அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் தண்டபாணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வட்டாட்சியா்கள், பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.