சதுரகிரியில் திரளான பக்தா்கள் தரிசனம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சதுரகிரி மலையில் புகழ்பெற்ற சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் பிரதோஷம், பெளா்ணமி, அமாவாசை ஆகிய நாள்களில் மட்டுமே பக்தா்களுக்கு மலையேற அனுமதி வழங்கப்படுகிறது.
புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, கடந்த செப்.30-ஆம் தேதி முதல் வியாழக்கிழமை (அக்.3) வரை பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அமாவாசையையொட்டி, புதன்கிழமை 10 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூா்த்தி, 18 சித்தா்களுக்கு 18 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா பெரியசாமி, செயல் அலுவலா் ராமகிருஷ்ணன், அறநிலையத் துறை அதிகாரிகள் செய்தனா்.